/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மது விலை உயர்வு; 'குடி'மகன்கள் புலம்பல்
/
மது விலை உயர்வு; 'குடி'மகன்கள் புலம்பல்
ADDED : பிப் 02, 2024 12:30 AM

திருப்பூர்;தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளில் மது பாட்டில்கள் விலை நேற்று முதல் உயர்த்தப்பட்டுள்ளது. விலை உயர்வு காரணமாக, மது பிரியர்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் நிறுவனம் சார்பில் சில்லறை மது விற்பனை கடைகள் செயல்படுகின்றன. இவற்றில் குறைந்த விலை, நடுத்தர விலை மற்றும் அதிகவிலை என மூன்று வகையான மது பாட்டில்கள் விற்பனையாகிறது.
இவை குவார்ட்டர், அரை மற்றும் முழு பாட்டில் மது வகையிலும், பீர் பாட்டில்களும் விற்பனையாகிறது.இந்நிலையில் கலால் வரி உயர்வைக் காரணம் காட்டி தமிழக அரசு தற்போது மது பாட்டில்கள் விலையை உயர்த்தியுள்ளது.
இந்த விலை உயர்வு நேற்று (பிப்.1) முதல் அமலுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அவ்வகையில், நேற்று முதல் இந்த புதிய விலை அமலுக்கு வந்தது.புதிய விலைப் பட்டியல் மதுக்கடை ஊழியர்களிடம் வழங்கப்பட்டு, அவற்றை அவர்கள் நேற்று கடை திறந்தவுடன், கடைகளின் முன்புறம் ஒட்டி வைத்தனர்.
இந்த புது விலையின் படி குவார்ட்டர் பாட்டில் 10 ரூபாய்; அரை பாட்டில் 20 முதல் 40 ரூபாய்; முழு பாட்டில் 40 முதல் 80 ரூபாய் என்ற அளவில் ரக வாரியாக விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.
விலை உயர்வு காரணமாக, மது பாட்டில் வாங்க அளவாக பணம் கொண்டு வந்த சிலர் ஏமாற்றத்துடன் திரும்பினர். இந்த விலை உயர்வு காரணமாக மது பிரியர்கள் மத்தியில் பெரும் அதிருப்தி ஏற்பட்டது.
ஏற்கனவே, கூடுதல் விலை வைத்து விற்பனை செய்கின்றனர். இதில், மேலும் அரசே விலையை உயர்த்தியுள்ளதால், தின்பண்டம், குளிர்பானம் வாங்குவதை சிலர் தவிர்த்து அந்த விலை உயர்வைச் சரிக்கட்டினர்.

