/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மூன்று அரசு நேரடி நெல் கொள்முதல் மையங்களுக்கு வரத்து அதிகரிப்பு! அமராவதி ஆயக்கட்டு பகுதிகளில் அறுவடை தீவிரம்
/
மூன்று அரசு நேரடி நெல் கொள்முதல் மையங்களுக்கு வரத்து அதிகரிப்பு! அமராவதி ஆயக்கட்டு பகுதிகளில் அறுவடை தீவிரம்
மூன்று அரசு நேரடி நெல் கொள்முதல் மையங்களுக்கு வரத்து அதிகரிப்பு! அமராவதி ஆயக்கட்டு பகுதிகளில் அறுவடை தீவிரம்
மூன்று அரசு நேரடி நெல் கொள்முதல் மையங்களுக்கு வரத்து அதிகரிப்பு! அமராவதி ஆயக்கட்டு பகுதிகளில் அறுவடை தீவிரம்
ADDED : டிச 10, 2024 11:30 PM

உடுமலை; அமராவதி பழைய ஆயக்கட்டு பகுதிகளில், நெல் அறுவடை நடந்து வரும் நிலையில், மூன்று அரசு நேரடி நெல் கொள்முதல் மையங்கள் வாயிலாக நேற்று வரை, 658 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவிலுள்ள, அமராவதி பழைய ஆயக்கட்டு, கல்லாபுரம், ராமகுளம், கொமரலிங்கம், கண்ணாடிபுத்துார், சோழமாதேவி, கடத்துார், கணியூர், காரத்தொழுவு ஆகிய எட்டு ராஜவாய்க்கால் பாசனத்திலுள்ள, 7,520 ஏக்கர் நிலங்களில், குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டது.
இதற்காக, அமராவதி அணையிலிருந்து, நடப்பாண்டு, ஜூன், 24ல் தண்ணீர் திறக்கப்பட்டு, கடந்த, நவ., 6 வரை தண்ணீர் வழங்கப்பட்டது. தற்போது, இப்பகுதிகளில் நெல் அறுவடை துவங்கியுள்ளது.
கடந்த மாதம் பெய்த தொடர் மழை மற்றும் அறுவடை இயந்திரம் வயல்களுக்குள் இறங்குவதில் சிக்கல் உள்ளிட்ட காரணங்களினால், பழைய ஆயக்கட்டு பாசன பகுதிகளில், அறுவடை தாமதமானது. தற்போது, இப்பகுதிகளில், நெல் அறுவடை தீவிரமடைந்துள்ளது.
விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கும் வகையிலும், வெளி மார்க்கெட்டில் நெல் விலை குறைவதை தடுக்கும் வகையில், கல்லாபுரம், ருத்ராபாளையம், மடத்துக்குளம் ஆகிய பகுதிகளில், நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில், அரசு நேரடி நெல் கொள்முதல் மையங்கள், கடந்த, அக்., மாதம் துவங்கப்பட்டது.
இப்பகுதிகளில், அறுவடை துவங்கியும், நவ., முதல் வாரத்திலிருந்து கொள்முதல் நடந்து வருகிறது.
இங்கு விவசாயிகளுக்கு, சன்ன ரக நெல் குவிண்டாலுக்கு, ஆதார விலை, ரூ.2,320 மற்றும் மாநில அரசு ஊக்கத்தொகை, ரூ.130 என, ரூ.2,450 வழங்கப்படுகிறது.
அதே போல், பொது ரகத்திற்கு, ஆதார விலை, ரூ.2,300 மற்றும் மாநில அரசு ஊக்கத்தொகை, ரூ.105 என, ரூ.2,405 வழங்கப்படுகிறது.
மடத்துக்குளம் அரசு நேரடி நெல் கொள்முதல் மையத்திற்கு, சோழமாதேவி, கடத்துார், கணியூர், காரத்தொழுவு, கண்ணாடிபுத்துார் பகுதி விவசாயிகள் நெல் விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.
இம்மையத்தில், நேற்று வரை, 338 டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. அதாவது, 40 கிலோ கொண்ட 8,500 மூட்டை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
அதே போல், கொமரலிங்கம் மேற்கு, கிழக்கு கிராம விவசாயிகளுக்காக ருத்ராபாளையத்தில் அமைக்கப்பட்டுள்ள கொள்முதல் மையத்தில், 240 டன், அதாவது 6 ஆயிரம் மூட்டை நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
கல்லாபுரம், அமராவதி நகர், வேல் நகர் உள்ளிட்ட விவசாயிகளுக்காக கல்லாபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள, நெல் கொள்முதல் மையத்தில், 80 டன், அதாவது, 2,300 மூட்டை வரை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
மூன்று மையங்களிலும், நேற்று வரை மொத்தம், 658 டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து, அமராவதி பழைய ஆயக்கட்டு பகுதிகளில் அறுவடை நடந்து வருவதால், நெல் கொள்முதல் தீவிரமடைந்துள்ளது.
கொள்முதல் அதிகரிப்பு
அதிகாரிகள் கூறியதாவது:
அமராவதி பழைய ஆயக்கட்டு பகுதிகளில் நெல் அறுவடை துவங்கி, நடந்து வருகிறது. நடப்பு குறுவை பருவத்தில் மகசூல் திருப்தியாக உள்ள நிலையில், அரசு நேரடி நெல் கொள்முதல் மையங்களுக்கும் விவசாயிகள் அதிகளவு வந்து, நெல் விற்பனை செய்து வருகின்றனர். அரசு நிர்ணயித்த தொகைக்கு நெல் கொள்முதல் செய்யப்படுவதோடு, உடனடியாக விவசாயிகள் வங்கி கணக்கில், கொள்முதல் செய்த நெல்லுக்குரிய தொகை செலுத்தப்படுகிறது.
அமராவதி பழைய ஆயக்கட்டு பாசன நிலங்களில், கடந்த குறுவை பருவ கொள்முதல் செய்த நெல்லை விட, நடப்பாண்டு குறுவை பருவத்தில், கொள்முதல் அதிகரித்துள்ளது. தொடர்ந்து, அறுவடை நடந்து வருவதால், விவசாயிகள் கொண்டு வரும் நெல் முழுவதும் கொள்முதல் செய்யப்படும். இவ்வாறு, தெரிவித்தனர்.