UPDATED : நவ 19, 2026 12:05 AM
ADDED : நவ 19, 2026 12:05 AM
மாதக்கணக்கான காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி
‘ஆன்லைனில்’ உடனடியாக கட்டட அனுமதி
* இனி, கட்டுமானத்துறை மேலும் வளர்ச்சி பெறும்
திருப்பூர்: கட்டட அனுமதி பெறுவதற்கான நடைமுறைகளை எளிமைப்படுத்தி, இணையவழியில் விரைவாக அனுமதி வழங்கும் தமிழக அரசின் புதிய திட்டத்தால், திருப்பூரின் கட்டுமானம் மற்றும் தொழில் வளர்ச்சி வேகமெடுக்கும் என கட்டுமானத் துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இதுவரை கட்டட அனுமதி பெற அரசு அலுவலகங்களுக்கு நேரில் சென்று காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது. தற்போது, இணையவழியில் கட்டணம் செலுத்தியதும், க்யூ.ஆர். குறியீட்டுடன் கூடிய அங்கீகரிக்கப்பட்ட கட்டட வரைபடம் மற்றும் அனுமதி ஆணையைப் பதிவிறக்கம் செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் வாயிலாக, தனி வீடுகள், சிறிய அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள் மற்றும் சிறிய தொழிற்சாலை களுக்கு விரைவாக அனுமதி பெற முடியும். டிஜிட்டல் ஆவணங்கள், கணினி வழி தற்செயல் ஆய்வு ஆகியவற்றால் வெளிப்படைத்தன்மை அதிகரிப்பதுடன், இடைத்தரகர்களின் தலையீடும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து திருப்பூர் கட்டுமான பொறியாளர்கள் சிலர் கூறியதாவது:
திருப்பூரில் குடியிருப்புகள் மற்றும் சிறு, குறு தொழிற்கூடங்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கட்டட அனுமதி பெறுவதில் ஏற்பட்டு வந்த காலதாமதத்தால், வீடு கட்டுதல் மற்றும் தொழில் விரிவாக்கப் பணிகள் பாதிக்கப்பட்டன. தற்போதைய புதிய நடைமுறையால் விரைவாக அனுமதி பெற்று கட்டுமானப் பணிகளைத் தொடங்க முடியும். இதனால் கட்டுமானத் தொழில் மட்டுமின்றி, அதைச் சார்ந்த உபதொழில்களும் வளர்ச்சியடையும். தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்புகள் அதிகரிப்பதுடன், திருப்பூரின் பொருளாதார வளர்ச்சிக்கும் இந்தத் திட்டம் உதவும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
