/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தென்னை மரங்களுக்கு காப்பீடு திட்டம்; விவசாயிகள் இணைய அறிவிப்பு
/
தென்னை மரங்களுக்கு காப்பீடு திட்டம்; விவசாயிகள் இணைய அறிவிப்பு
தென்னை மரங்களுக்கு காப்பீடு திட்டம்; விவசாயிகள் இணைய அறிவிப்பு
தென்னை மரங்களுக்கு காப்பீடு திட்டம்; விவசாயிகள் இணைய அறிவிப்பு
ADDED : நவ 12, 2024 05:34 AM
உடுமலை ; தென்னை பயிர்க்காப்பீட்டு திட்டத்தில் இணைந்து, விவசாயிகள் பயன்பெறுமாறு, தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தில், 81 ஆயிரத்து, 431 ஹெக்டேர் பரப்பளவில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் வேளாண் காப்பீட்டு நிறுவனம், நடப்பு ஆண்டிற்கான தென்னை மரங்களை காப்பீடு செய்து கொள்ளும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
இத்திட்டத்தின் கீழ், கடுமையான வெள்ளம், புயல், வறட்சி, பூச்சி நோய் தாக்குதல், எதிர்பாராத தீ விபத்து, நில அதிர்வு உள்ளிட்ட இயற்கை சீற்றங்களால் தென்னை மரங்கள் நேரடியாக பாதிக்கப்பட்டாலோ அல்லது முற்றிலும் பலன் கொடுக்காத நிலை ஏற்பட்டாலோ, இத்திட்டத்தின் கீழ் இழப்பீடு பெற முடியும்.
இக்காப்பீடு திட்டத்தில் சேர, தென்னை சாகுபடி செய்துள்ள விவசாயிகள், தனிப்பயிராகவோ, ஊடுபயிராகவோ வரப்பில் வரிசையாகவோ, வீட்டுத்தோட்டத்திலோ குறைந்தபட்சம் பயன் தரக்கூடிய, ஐந்து மரங்களாவது சாகுபடி செய்திருக்க வேண்டும்.
ஆண்டுக்கு, 30 காய்களுக்கு மேல் மகசூல் தரக்கூடிய மரங்கள் இத்திட்டத்தில் சேர்க்கலாம். குட்டை மற்றும் ஒட்டுரகங்கள், 4ம் ஆண்டு முதலும், நெட்டை ரகங்கள், 7 ஆம் ஆண்டு முதல், 60ம் ஆண்டு வரை காப்பீடு செய்யலாம்.
ஒரு ஹெக்டேருக்கு, 175 மரங்கள் மட்டுமே காப்பீடு செய்ய தகுதியாகும். காப்பீடு தொகையாக, 4 முதல், 15 வயதுடைய மரங்களுக்கு, காப்பீடு தொகை, ரூ.9 ஆகும். இதில், விவசாயிகள் மானியம் போக, ஆண்டுக்கு, ரூ.2.25 பிரீமியம் செலுத்த வேண்டும்.
பாதிப்பு ஏற்பட்டால், மரம் ஒன்றுக்கு, ரூ.900 இழப்பீடு வழங்கப்படும். 16 வயது முதல், 60 வயது வரை உள்ள மரங்களுக்கு காப்பீடு தொகை ரூ.14ல், அரசு மானியம் போக, ஒரு ஆண்டுக்கு, ரூ. 3.50 பிரீமியம் செலுத்த வேண்டும்.
இழப்பு ஏற்பட்டால், மரம் ஒன்றுக்கு, ரூ. 1,750 வழங்கப்படும். விவசாயிகள், 3 ஆண்டு வரை காப்பீடு செய்து கொள்ளலாம்.
இத்திட்டத்தில் சேர, தென்னை விவசாயிகள் அருகில் உள்ள வேளாண் விரிவாக்க மையம் மற்றும் தோட்டக்கலைத்துறை அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, தெரிவித்தனர்.