/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பட்டுக்கூடுகளுக்கு இன்சூரன்ஸ் திட்டம் நிறுத்தம்; விவசாயிகள் பாதிப்பு
/
பட்டுக்கூடுகளுக்கு இன்சூரன்ஸ் திட்டம் நிறுத்தம்; விவசாயிகள் பாதிப்பு
பட்டுக்கூடுகளுக்கு இன்சூரன்ஸ் திட்டம் நிறுத்தம்; விவசாயிகள் பாதிப்பு
பட்டுக்கூடுகளுக்கு இன்சூரன்ஸ் திட்டம் நிறுத்தம்; விவசாயிகள் பாதிப்பு
ADDED : ஜன 26, 2025 11:52 PM
உடுமலை; பட்டுக்கூடு மனைகளுக்கான இன்சூரன்ஸ் காலாவதியாகி, 4 மாதமாகியும் புதுப்பிக்காததால், பட்டுக்கூடு உற்பத்தி விவசாயிகள் பாதித்து வருகின்றனர்.
தமிழகத்தில், 26 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பட்டுக்கூடு உற்பத்தி தொழிலில் ஈடுபட்டுள்ளனர். பட்டுப்புழுக்களுக்கு மல்பெரி இலைகள் சாகுபடி செய்து, பட்டு புழு வளர்ப்பு மனைகள் அமைத்து, பட்டுக்கூடு உற்பத்தி செய்யப்படுகிறது.
பட்டு முட்டைகளிலிருந்து, ஏழு நாட்கள் இளம்புழு வளர்ப்பு மனைகளில் வளர்க்கப்பட்டு, 21 நாட்கள் விவசாயிகளின் பட்டுப்புழு வளர்ப்பு மனைகளில், உரிய சீதோஷ்ண நிலை பராமரிக்கப்பட்டு, மல்பெரி இலைகள் உணவாக வழங்கி வளர்க்கப்பட்டு, இறுதியில் கூடு கட்டுகின்றன.
சீதோஷ்ண நிலை மாற்றம், தரமற்ற முட்டை, இளம்புழு வினியோகம், நோய் தாக்குதல், உற்பத்தி செலவினம் அதிகரித்துள்ள நிலையில், தொடர் விலை சரிவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால், விவசாயிகள் பாதித்து வருகின்றனர்.
பட்டு புழு வளர்ப்பு தோல்வி, திடீர் விபத்து, இயற்கை சீற்றங்கள் உள்ளிட்ட காரணங்களினால், விவசாயிகள் பாதிப்பதை தடுக்கும் வகையில், தமிழக அரசு பட்டு வளர்ச்சித்துறை சார்பில், பட்டுப்புழு வளர்ப்பு மனைகளுக்கு இன்சூரன்ஸ் செய்து தரப்படுகிறது.
முழுமையாக இதற்கான பிரீமியம் தொகையை அரசு செலுத்தி வந்த நிலையில், கடந்த, 2023-24ம் ஆண்டில், விவசாயிகள் பங்களிப்பு தொகை, ரூ.290, அரசு பங்களிப்பு தொகை, ரூ. 511 என, ரூ. 811 ரூபாய் காப்பீட்டு நிறுவனத்திற்கு செலுத்தப்பட்டது.
கடந்தாண்டு, 600க்கும் மேற்பட்ட விவசாயிகள் பாதித்து, இழப்பீடு கோரி விண்ணப்பித்த நிலையில், அதற்குரிய தொகை இன்சூரன்ஸ் நிறுவனத்தால் வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்படுகிறது.
அதோடு, கடந்தாண்டு செப்.,மாதத்துடன் இன்சூரன்ஸ் காலக்கெடு முடிந்த நிலையில், மீண்டும் புதுப்பிக்கப்படவில்லை. இதனால், கடந்த, 4 மாதமாக, பல பட்டு புழு வளர்ப்பு மனைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழக பட்டுக்கூடு உற்பத்தி விவசாயிகள் நல சங்க தலைவர் செல்வராஜ் கூறியதாவது:
தமிழக அரசும், பட்டு வளர்ச்சித்துறையும், பட்டுக் கூடு உற்பத்தி தொழில் நலிவடைந்து வருவது குறித்து கண்டு கொள்வதில்லை. பல்வேறு மானிய திட்டங்களை நிறுத்தியுள்ளது.
ஏற்கெனவே, இன்சூரன்ஸ் பிரீமியம் தொகை முழுவதையும் செலுத்தி வந்த நிலையில், கடந்தாண்டு விவசாயிகளையும் பங்களிப்பு தொகை செலுத்த வலியுறுத்தியுள்ளது. அப்படி இன்சூரன்ஸ் செய்த, விவசாயிகளுக்கும், இழப்பீடு வழங்கவில்லை. இன்சூரன்ஸ் காலக்கெடு முடிந்து, நான்கு மாதமாகியும், புதுப்பிக்கவில்லை.
இதனால், சீதோஷ்ண நிலை மாற்றம், இயற்கை சீற்றம், புழு வளர்ப்பு தோல்வி என பல்வேறு சிக்கல்கள் காரணமாக, விவசாயிகள் பாதிக்கப்பட்டு, இத்தொழிலிருந்து வெளியேறி வருகின்றனர். அரசு உடனடியாக பட்டு வளர்ச்சி துறை குளறுபடிகளை சரி செய்ய வேண்டும்.
இவ்வாறு, கூறினார்.