/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஊடுபயிர் சாகுபடிக்கு வழிகாட்டுதல் தேவை! தென்னை விவசாயிகள் எதிர்பார்ப்பு
/
ஊடுபயிர் சாகுபடிக்கு வழிகாட்டுதல் தேவை! தென்னை விவசாயிகள் எதிர்பார்ப்பு
ஊடுபயிர் சாகுபடிக்கு வழிகாட்டுதல் தேவை! தென்னை விவசாயிகள் எதிர்பார்ப்பு
ஊடுபயிர் சாகுபடிக்கு வழிகாட்டுதல் தேவை! தென்னை விவசாயிகள் எதிர்பார்ப்பு
ADDED : மார் 19, 2024 10:54 PM

உடுமலை:'தென்னந்தோப்புகளில், ஊடுபயிர் சாகுபடியை ஊக்குவிக்க தோட்டக்கலைத்துறை வாயிலாக கூடுதல் தொழில்நுட்ப பயிற்சி வழங்க வேண்டும்,' என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
உடுமலை, குடிமங்கலம் வட்டாரங்களில், பிரதான சாகுபடியாக தென்னை உள்ளது. பல ஆயிரம் ெஹக்டேரில், நீண்ட கால பயிராக பராமரிக்கப்படும் தென்னை மரங்களில், நோய்த்தாக்குதலால், காய்ப்புத்திறன் பாதித்துள்ளது. தேங்காய் மற்றும் கொப்பரை விலையும் பல ஆண்டுகளாக உயரவில்லை.
இதனால், வருவாய் இழந்து வந்த விவசாயிகள், நிலையை சமாளிக்க, தென்னந்தோப்புகளில், ஊடுபயிர் சாகுபடி செய்ய ஆர்வம் காட்டுகின்றனர். காய்ப்பிலுள்ள தென்னை மரங்களுக்கு இடையே, கோகோ, ஜாதிக்காய் உள்ளிட்ட ஊடுபயிர்களை நடவு செய்து பராமரிக்கின்றனர்.
காய்ப்புக்கு வராத தென்னங்கன்றுகளுக்கு இடையே மக்காச்சோளம், நிலக்கடலை, சின்னவெங்காயம் உள்ளிட்ட சாகுபடிகளை மேற்கொள்கின்றனர்.
இவ்வாறு, ஊடுபயிர் சாகுபடி செய்யும் போது, தென்னங்கன்றுகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது; காய்ப்புத்திறனிலுள்ள மரங்களிலும் சில பிரச்னைகள் உருவாகிறது.
ஊடுபயிர் தேர்வு, அதற்கான இடுபொருட்கள் குறித்து விவசாயிகளிடையே போதிய விழிப்புணர்வு இல்லை. இதனால், ஊடுபயிரிலும் போதிய வருவாய் கிடைக்காமல் பாதிக்கப்படுகின்றனர்.
விவசாயிகள் கூறியதாவது: தென்னை விவசாயிகளின் வருவாயை பெருக்க, ஊடுபயிர் சாகுபடிக்கு முக்கியத்துவம் தரப்படும் என தமிழக அரசு அறிவித்தது. ஆனால், எவ்வித மானிய திட்டங்களையும் செயல்படுத்தவில்லை.
ஊடுபயிர்களுக்கு சொட்டு நீர் பாசனம் அமைக்க மானியம் வழங்கப்பட வேண்டும். குறைந்தபட்சமாக, ஊடுபயிர் சாகுபடிக்கு பின்பற்ற வேண்டிய தொழில்நுட்பங்கள் குறித்தாவது தோட்டக்கலைத்துறை, தென்னை ஆராய்ச்சி நிலையம் வாயிலாக குறிப்பிட்ட இடைவெளியில், விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியமாகும்.
இவ்வாறு, விவசாயிகள் தெரிவித்தனர்.

