/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கரும்பிலிருந்து தென்னைக்கு மாற்றம் ஏழு குள ஆயக்கட்டில் ஆர்வம்
/
கரும்பிலிருந்து தென்னைக்கு மாற்றம் ஏழு குள ஆயக்கட்டில் ஆர்வம்
கரும்பிலிருந்து தென்னைக்கு மாற்றம் ஏழு குள ஆயக்கட்டில் ஆர்வம்
கரும்பிலிருந்து தென்னைக்கு மாற்றம் ஏழு குள ஆயக்கட்டில் ஆர்வம்
ADDED : டிச 31, 2024 04:52 AM
உடுமலை : கரும்பு சாகுபடியில் நிலவும் தொடர் பிரச்னைகளால், தென்னை உட்பட மாற்றுச்சாகுபடிக்கு, ஏழு குள பாசன விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
உடுமலை ஏழுகுள பாசன திட்டத்தில், 2 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான பரப்பு, நேரடியாக பாசன வசதி பெறுகிறது. சுற்றுப்பகுதியிலுள்ள, பல ஆயிரம் ஏக்கரில் கிணற்றுப்பாசனத்துக்கு ஆதாரமாகவும், இக்குளங்கள் உள்ளன.
நிலையான நீர் வளம் காரணமாக, இப்பகுதியில், கரும்பு பிரதான பயிராக இருந்தது. அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கும், வெல்லம் உற்பத்திக்கும், கரும்பு விற்பனை செய்யப்பட்டு வந்தது. காலப்போக்கில், கரும்பு சாகுபடியில் பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டது.
கரும்பு அறுவடை சீசனில், விலை சரிந்து விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. அரசின் ஆதார விலை நிர்ணய திட்டமும் முறையாக செயல்பாட்டில் இல்லை. இதனால், ஓராண்டு கரும்பு பயிர்களை மட்டும், பராமரிக்கும் விவசாயிகளுக்கு, அதிக நஷ்டம் எற்படுகிறது.
தொழிலாளர் பற்றாக்குறையும், வெல்லம் விற்பனையில் நிலவும் சிக்கல்களும், கரும்பு சாகுபடியை விவசாயிகள் கைவிட முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
உடுமலை சுற்றுப்பகுதியில், நீண்ட கால பயிராக தென்னை மரங்கள் பராமரிக்கப்படுகிறது. பிற சாகுபடியை விட தொழிலாளர் தேவை குறைவாக இருப்பது, தென்னை சாகுபடியாளர்களுக்கு ஆறுதல் அளிக்கிறது.
இதிலும், வெள்ளை ஈ தாக்குதலால், தொடர் பாதிப்புகள் ஏற்படுகிறது. இருப்பினும், கரும்பிலிருந்து தென்னை சாகுபடிக்கு மாறவே அதிக விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அவ்வகையில், வடகிழக்கு பருவமழைக்கு பிறகு, தென்னங்கன்றுகள் நடவு பரப்பு அதிகரித்து வருகிறது. மேலும், ஆயக்கட்டு பகுதியில், வாழை சாகுபடிக்கும் பெரும்பாலான விவசாயிகள் மாறியுள்ளனர்.