/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'யங் இந்தியன்ஸ்' உறுப்பினராக ஆசையா?
/
'யங் இந்தியன்ஸ்' உறுப்பினராக ஆசையா?
ADDED : ஜன 26, 2025 03:23 AM
திருப்பூர்: தேசிய அளவில் இளைஞர்களுக்கான தலைமைப்பண்பை வளர்க்கும், 'யங் இந்தியன்ஸ்' அமைப்பு, இந்திய தொழில் கூட்டமைப்பின் (சி.ஐ.ஐ.,) துணை அமைப்பாக இயங்கி வருகிறது. கடந்த பத்து ஆண்டுகளாக, திருப்பூரில் பல்வேறு இயக்கங்களை நடத்தி, மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
கடந்த, 2002ம் ஆண்டில், அப்போதைய ஜனாதிபதியான அப்துல்கலாம் அறிவுரையுடன், 'யங் இந்தியன்ஸ்' தொடங்கப்பட்டது. இன்று, நாடு முழுவதும், 7,000க்கும் அதிகான உறுப்பினர்கள்; 69 உப அமைப்புகள் என, நாடு முழுவதும் பரவி, இளைஞர்களுக்கான ஒற்றை வலிமை அமைப்பாக உயர்ந்திருக்கிறது.
'டாலர்சிட்டி' நகரமான திருப்பூரில், 2017ல் 'யங் இந்தியன்ஸ்' துவங்கப்பட்டது; முதன்முதலாக, மராத்தான்' வெற்றிகரமாக நடத்தப்பட்டது; கடந்த ஆண்டும், உடல் ஆரோக்கியத்துக்கான விழிப்புணர்வு மராத்தான் எழுச்சியுடன் நடந்தது.
தமிழகத்தில் முதல் முறையாக, மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்யேக ஓட்டத்தினை நடத்தியதும், திருப்பூர் 'யங் இந்தியன்ஸ்' அமைப்பு தான் என்ற பாராட்டையும் பெற்றுள்ளனர். கடந்த ஆண்டில், 219 சிறிய மற்றும் பெரிய அளவிலான செயல்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
'மாசூம்' என்ற பெயரில், குழந்தைகளுக்கான பாதுகாப்பு விழிப்புணர்வு, மாநகர பகுதியில் உள்ள பள்ளிகளில், 100 நிகழ்ச்சியாக நடத்தப்பட்டது; 10 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவ, மாணவியர் பயனடைந்தனர்.
திருப்பூரில் சாலை விபத்துக்களை குறைக்கும் முயற்சியாக, மாநகர போலீசுடன் இணைந்து, நோ ஹெல்மெட் நோ கீ என்ற செயல்திட்டத்தினை முதன்முறையாக செயல்படுத்தினர்.
'யங் இந்தியன்ஸ்' சிறப்பு குழுக்களில் நிர்வாகிகளாக நியமித்து, சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர். தற்போது, 'யங் இந்தியன்ஸ்' அமைப்பில் உறுப்பினராக சேரலாம் என, அழைப்புவிடுத்துள்ளனர்.
'யங் இந்தியன்ஸ்' நிர்வாகிகள் கூறுகையில்,'ஆர்வமுள்ளவர்கள், உறுப்பினராக இணையலாம்; 25 வயது முதல், 40 வயதுக்கு உட்பட்ட சமுதாய அக்கறை கொண்டவர்கள் இணையலாம். எவ்வித அரசியல் சாயமும் இல்லாமல், தேசத்தினை வலிமைப்படுத்தும் ஓரே குறிக்கோள் கொண்டு செயல்பட கரம் கோர்க்கலாம். இந்தாண்டு உறுப்பினர் சேர்க்கை நடப்பதால், ஆர்வமுள்ள இளைஞர்கள் முன்வரலாம்,' என்றனர்.

