/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சுங்கவரித்துறை சிக்கலுக்கு தீர்வு 'துணைவன் போர்ட்டல்' அறிமுகம்
/
சுங்கவரித்துறை சிக்கலுக்கு தீர்வு 'துணைவன் போர்ட்டல்' அறிமுகம்
சுங்கவரித்துறை சிக்கலுக்கு தீர்வு 'துணைவன் போர்ட்டல்' அறிமுகம்
சுங்கவரித்துறை சிக்கலுக்கு தீர்வு 'துணைவன் போர்ட்டல்' அறிமுகம்
ADDED : ஜூன் 11, 2025 06:41 AM
திருப்பூர்; சுங்கவரித்துறை தொடர்பான குறைபாடுகளுக்கு விரைந்து தீர்வு காண உதவும் வகையில், துணைவன் என்ற 'போர்ட்டல்' அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வர்த்தகம் செய்வோர், சுங்கவரி மற்றும் வரிச்சலுகை தொடர்பான சேவைகளுக்கு, சுங்கவரித்துறையை சார்ந்துள்ளனர். சுங்கவரித்துறை தொடர்பான குறைபாடுகள், புகார்கள் இருந்தால், உரிய தீர்வு பெற சரியான வழிமுறை கிடையாது. 'ஐஸ் கேட் ( இந்தியன் கஸ்டம்ஸ் எலக்ட்ரானிக் கேட்வே)' எனப்படும் சுங்கவரித்துறை இணையதளத்தில் பதிவு செய்தும், நேரிலும் புகார் செய்யலாம்.
இருப்பினும், மேல்நடவடிக்கை தொடர்பான விவரங்களை அறியும் வசதி இல்லை.இந்நிலையில், திருச்சி சுங்கவரித்துறை கமிஷனரகம் மற்றும் ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (ஏ.இ.பி.சி.,) சார்பில், 'துணைவன்' என்ற 'போர்ட்டல் வடிவமைக்கப்பட்டுள்ளது.
புதிய 'போர்ட்டலில்', கோரிக்கை அல்லது புகாரை பதிவு செய்தால், சம்பந்தப்பட்ட அலுவலர் அல்லது அதிகாரி கவனத்துக்கு செல்லும். அவர் புகாரை ஏற்று, மேல்நடவடிக்கை எடுப்பதை, 'ஆன்லைன்' வாயிலாக உறுதி செய்யும் வசதி உள்ளது. ஒருவார காலத்துக்குள், கோரிக்கை அல்லது புகாருக்கு தீர்வு காணப்படும். இல்லாதபட்சத்தில், அந்த புகார், 30வது நாள், தலைமை கமிஷனர் பார்வைக்கு தானாகவே சென்று விடும்.
அவர், அந்த கோரிக்கையின் மீது விரைந்து நடவடிக்கை எடுப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஏ.இ.பி.சி., துணை தலைவர் சக்திவேல் கூறுகையில்,''ஏற்றுமதியாளரின், சுங்கவரித்துறை தொடர்பான கோரிக்கை மற்றும் குறைபாடுகளை, 'துணைவன்' போர்ட்டல் வாயிலாக, பதிவு செய்து, எளிதாக தீர்வு பெறலாம். திருச்சி சுங்கவரித்துறை கமிஷனரகத்துடன் இணைந்து, ஏ.இ.பி.சி., இத்தகைய 'போர்ட்டலை' உருவாக்கியுள்ளது. வரும், 12ம் தேதி (நாளை) திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தில் நடக்கும் விழாவில், மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்கவரித்துறை வாரிய உறுப்பினர் (சி.பி.ஐ.சி.,) மோகன் குமார் சிங், 'துணைவன்' சேவை தளத்தை துவக்கி வைக்க உள்ளார்,'' என்றார்.