/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சினிமாக்களில் முதலீடு... கேரள மக்கள் ஆர்வம்
/
சினிமாக்களில் முதலீடு... கேரள மக்கள் ஆர்வம்
ADDED : ஜன 12, 2025 02:08 AM
''வளைகுடா, அரபு எமிரேட் நாடுகளுக்கு சென்று சம்பாதிக்கும் கேரள மக்கள், சினிமாக்களில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுகின்றனர்'' என்கிறார் எழுத்தாளர் சுப்ரபாரதி மணியன்.சமீபத்தில், கேரளா, திருவனந்தபுரத்தில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்று திரும்பிய சுப்ரபாரதி மணியன், நம்முடன் பகிர்ந்தவை:
கேரளா, ஒரு கலாசார நகரம் என்பது, அனைவரும் அறிந்தது. ஆண்டுமுழுக்க அங்கு ஏதாவது ஒரு கலாசார நிகழ்வு நடந்துக் கொண்டே இருக்கும். சின்ன மாநிலமாக இருந்தாலும், கலை, கலாசாரம், சினிமா சார்ந்த விஷயங்களுக்கு கூடுதல் பட்ஜெட் ஒதுக்கப்படுகிறது.
திருவனந்தபுரத்தில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில், உலகம் முழுக்க இருந்தும், சிறந்த, 150 சினிமாக்கள் திரையிடப்பட்டன. இதில், மலையாள சினிமாக்கள், 10 இடம் பெற்றிருந்தன. தமிழ் மொழியில், 'அங்கம்மாள்' என்ற ஒரே ஒரு சினிமா மட்டுமே இடம் பெற்றிருந்தது. அந்த சினிமாவின் இயக்குனர், கேமரா மேன் உள்ளிட்ட தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் மலையாளிகள்; நடிகர்கள் மட்டுமே தமிழர்கள்.
கேரளாவை பொறுத்தவரை, திரைப்பட விழாக்களை, 10 நாள் நடத்துகின்றனர். ஒரு பாரம்பரிய விழாவாக, கொண்டாட்ட மனநிலையில் நடத்துகின்றனர். கோவாவில் மத்திய அரசின் சார்பில் நடந்த திரைப்பட விழாவில், உலகம் முழுக்க இருந்து, 5 ஆயிரம் பிரதிநிதிகள் பங்கேற்றனர். திருவனந்தபுரம் திரைப்பட விழாவில், 13 ஆயிரம் பிரதிநிதிகள் பங்கேற்றனர்; பெரும்பாலும் இளைஞர்களை அதிகளவில் பார்க்க முடிந்தது.
திரைப்பட விழாவில் கலாசார நடனம், சினிமா தொடர்புடைய கருத்தரங்குகள் நடத்தப்படுகின்றன. கேரளாவை சேர்ந்த பலர் வளைகுடா மற்றும் அரபு நாடுகளில் பணிபுரிகின்றனர். அவர்கள் சின்ன மற்றும் நடுத்தர பட்ஜெட் படங்களுக்கு 'பைனான்ஸ்' செய்கின்றனர். கேரளாவில், ஓ.டி.டி., தளத்தில் வெளியிடுவதற்காகவே, சின்ன பட்ஜெட் படங்கள் அதிகளவில் தயாரிக்கின்றனர். ஆனால், தமிழில், 95 சினிமாக்கள், தியேட்டரில் திரையிடப்பட்ட பிறகே, ஓ.டி.டி.,க்கு வருகிறது.தமிழக சினிமா துறையிலும், சமீபகாலமாக, மாறுபட்ட கதையம்சம் கொண்ட சினிமாக்கள் வருகின்றன. இலக்கிய திருவிழா, கரிசல் விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தமிழக அரசு நடத்துவது, வரவேற்கத்தக்கது. இவ்வாறு, அவர் கூறினார்.

