/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நடைமுறைக்கு வராத அமராவதி அணை துார்வரும் திட்டம் பாசன விவசாயிகள் அதிருப்தி
/
நடைமுறைக்கு வராத அமராவதி அணை துார்வரும் திட்டம் பாசன விவசாயிகள் அதிருப்தி
நடைமுறைக்கு வராத அமராவதி அணை துார்வரும் திட்டம் பாசன விவசாயிகள் அதிருப்தி
நடைமுறைக்கு வராத அமராவதி அணை துார்வரும் திட்டம் பாசன விவசாயிகள் அதிருப்தி
ADDED : ஏப் 24, 2025 10:43 PM

உடுமலை,; உடுமலை அருகேயுள்ள அமராவதி அணை துார்வாரும் திட்டம் அறிவிப்போடு, செயல்பாட்டிற்கு வராமல் உள்ளதால், விவசாயிகள் அதிருப்தியில் உள்ளனர்.
உடுமலை அருகேயுள்ள அமராவதி அணை, 1958ல் கட்டப்பட்டு, 1959 முதல் பயனுக்கு வந்தது. 4 டி.எம்.சி., கொள்ளளவும், ஆண்டுக்கு, 10 டி.எம்.சி., நீர் பாசனத்திற்கு பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டது.
அணை வாயிலாக, திருப்பூர், கரூர் மாவட்டங்களிலுள்ள, 54 ஆயிரத்து, 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.
பழைய ஆயக்கட்டு பாசனத்தில், குறுவை, சம்பா, தாளடி என மூன்று போகம் நெல் சாகுபடியும், புதிய ஆயக்கட்டு பாசன நிலத்தில், கரும்பு, தென்னை என பயிர் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வந்தது.
காலநிலை மாற்றத்தால் பருவ மழைகள் குறைவு, அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கேரளா அரசு புதிதாக தடுப்பணைகள் கட்டுதல் மற்றும் அணை நீர் தேக்கும் பகுதிகளில், அதிகளவு வண்டல் மண், மணல் தேங்கியுள்ளதால், நீர் கொள்ளளவு பெருமளவு குறைந்து, பருவ மழை காலத்தில் கிடைக்கும் நீரை சேமித்து பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
அணை மொத்த நீர் இருப்பில், 15 முதல் 20 சதவீதம் வரை, மண் பரப்பாக மாறியுள்ளது. இதனால், 800 மில்லியன் கனஅடி வரை நீர் தேக்க முடியாத சிக்கல் ஏற்பட்டுள்ளது.
2012ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி, அணையில், 24.48 மில்லியன் கியூபிக் மீட்டர் வண்டல் மண் தேங்கியுள்ளது.
இதனை முறையாக அகற்றுவதற்கு, நீர் வளத்துறை சார்பில், மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு ஆய்வு, மத்திய சுற்றுச்சூழல், வனத்துறை, மாசுகட்டுப்பாட்டு வாரிய அனுமதி பெறுதல் மற்றும் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு கட்டணம் செலுத்த, ரூ.1.21 கோடி நிதியும், கண்காணிப்பு பணிக்கு, ரூ.3 கோடி செலவாகும் என திட்ட மதிப்பீடு தயாரித்து, முறையாக அரசு ஆணை வெளியிடப்பட்டது.
அணையில் தேங்கியுள்ள வண்டல் மண்ணில், 47 சதவீதம் களிமண், 51 சதவீதம் மணல், 2 சதவீதம் கிராவல் உள்ளது.
மூன்று ஆண்டுகளில், மொத்தமுள்ள, 8.256 மில்லியன் கியூபிக் மீட்டர் வண்டல் மண்ணில், 7.936 கியூபிக் மீட்டர் மண் விற்பனை செய்தால், அரசுக்கு, 250.35 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும்.
இதே போல், வைகை, பேச்சிப்பாறை, மேட்டூர் என நான்கு அணைகளை துார்வார, ஆய்வு, அனுமதி, கண்காணிப்புக்கு என, மொத்தம், ரூ. 3.62 கோடி ஒதுக்கப்பட்டு, அரசாணை வெளியிடப்பட்டது.
விவசாயிகளுக்கு இலவசமாக வழங்குவதோடு, வைகை, ரூ.315.10 கோடி, பேச்சிப்பாறை, ரூ.140.36 கோடி, மேட்டூர், ரூ.112.76 கோடி என மண், மணல் விற்பனை வாயிலாக வருவாய் கிடைக்கும் எனவும், கோவை, மதுரை, திருச்சி தலைமை பொறியாளர்கள் உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது.
ஆனால், நிதி ஒதுக்கியும், அணைகள் துார்வாரும் திட்டம் நடைமுறைக்கு வரவில்லை.
அதிகாரிகள் கூறுகையில், 'அணைகள் துார்வாரும் திட்ட ஆய்வு, திட்டமதிப்பீடு தயாரிக்கப்பட்டது. மத்திய, மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு, அரசு துறைகளிடம் அனுமதி பெற கட்டணம் செலுத்துவது என பல்வேறு பணிகள் உள்ளது. மத்திய, மாநில அரசு துறைகள் அனுமதி பெற்றதும், பணிகள் துவங்கும்,' என்றனர்.

