சீரற்ற மும்முனை மின்சார வினியோகத்தால் சவாலாகும் நீர்ப்பாசனம்!மின்வாரியத்தின் கவனம் திரும்ப வலியுறுத்தல்
சீரற்ற மும்முனை மின்சார வினியோகத்தால் சவாலாகும் நீர்ப்பாசனம்!மின்வாரியத்தின் கவனம் திரும்ப வலியுறுத்தல்
UPDATED : செப் 10, 2026 04:00 PM
ADDED : செப் 10, 2026 03:51 PM

பெதப்பம்பட்டி: தென்னை சாகுபடி பிரதானமாக உள்ள உடுமலை, பொள்ளாச்சி பகுதியில், நிலவும் வறட்சியை சமாளிக்க, துணை மின்நிலையங்களில் இருந்து சீரான மும்முனை மின்சாரம் வினியோகிக்க வேண்டும்; ரூரல் பீடர் எனப்படும் கிராம மின்வழித்தட பராமரிப்பில், கூடுதல் கவனம் செலுத்தவும் மின்வாரிய அதிகாரிகளை விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். உடுமலை மின்பகிர்மான வட்டத்தின் கீழ், பொள்ளாச்சி, உடுமலை பகுதியில், 10க்கும் மேற்பட்ட துணை மின்நிலையங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இரு பகுதிகளிலும், 2 லட்சம் ஏக்கருக்கும் அதிகமான பரப்பில், நீண்ட கால பயிராக தென்னை மரங்கள் பராமரிக்கப்பட்டு வருகிறது.
வாட்டும் வறட்சி மேற்குத்தொடர்ச்சி மலை பகுதிகளில் இந்தாண்டு தென்மேற்கு பருவமழை போதியளவு பெய்யவில்லை. பி.ஏ.பி., அணைகளின் நீர்மட்டமும் திருப்திகரமாக இல்லை.
வேளாண் விளைநிலங்களில் அமைக்கப்பட்டுள்ள கிணறு மற்றும் போர்வெல்களிலும் நீர்மட்டம் சரிந்து, தென்னை மரங்களுக்கு போதியளவு தண்ணீர் கிடைப்பது சவாலாகியுள்ளது.
தற்போது போர்வெல்களில் இருந்து பெறப்படும் குறைந்த தண்ணீரை, பண்ணைக்குட்டை அல்லது தொட்டிகளில் சேகரித்து பிறகு தென்னை மரங்களின் பாசனத்துக்கு பயன்படுத்துகின்றனர்.
இத்தகைய நடைமுறை தொய்வில்லாமல் நடக்க, சீரான மும்முனை மின்சார வினியோகம் தேவையாகும்.
குறிப்பிட்ட நேரத்தில்... கிராமப்புறங்களில் அமைந்துள்ள, தேவனுார்புதுார், அங்கலக்குறிச்சி, நெகமம், கொங்கல்நகரம், ஆலாமரத்துார் உள்ளிட்ட துணை மின் நிலையங்களில் இருந்து விவசாய மின் இணைப்புகளுக்கு குறிப்பிட்ட நேரம் மட்டுமே மும்முனை மின்சாரம் வழங்கப்படும்.
அந்த வேளையில் விவசாயிகள் தங்கள் மின்மோட்டார்களை இயக்கி நீர்ப்பாசனம் செய்ய வேண்டும். சமீபகாலமாக ரூரல் பீடர் எனப்படும் கிராம மின்வழித்தடங்களில், சீரான மும்முனை மின்சாரம் இருப்பதில்லை என விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
அடிக்கடி மின்தடை, இரு முனை மின்சார வினியோகம் உள்ளிட்ட காரணங்களால் மின்மோட்டர்கள் பழுது, குறித்த நேரத்தில் நீர் பாய்ச்ச முடியாது உள்ளிட்ட பிரச்னைகளை விவசாயிகள் சந்திக்கின்றனர்.
விவசாயிகள் கூறுகையில், 'மும்முனை மின்சாரம் வினியோகிக்கப்படும் நேரம் மற்றும் தடைபடும் நேரம் குறித்து மின்வாரியம் வெளிப்படையாக தெரிவித்தால் அதற்கேற்ப நீர்ப்பாசன பணிகளை திட்டமிடலாம். அடிக்கடி மின்தடை ஏற்பட்டால், இருக்கும் குறைந்த நீரை குறித்த நேரத்தில் தென்னை மரங்களுக்கு பாய்ச்ச முடியாது. கடும் வறட்சியை சந்தித்து வருவதால், கிராம மின்வழித்தட பராமரிப்பு மற்றும் சீரமைப்பு பணிகளில் மின்வாரியத்தினர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்,' என்றனர்.
