/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பி.ஏ.பி., வாய்க்காலில் பாசன நீர் வந்தாச்சு!
/
பி.ஏ.பி., வாய்க்காலில் பாசன நீர் வந்தாச்சு!
ADDED : ஆக 26, 2025 11:01 PM

திருப்பூர்; பி.ஏ.பி., பாசனத்துக்கு திறக்கப்பட்ட தண்ணீர், அமராவதி நகர் வாய்க்கால் வழியாக சென்று கொண்டிருக்கிறது.
நான்காவது மண்டலத்துக்கு திறக்கப்பட்ட பாசன நீர், திருப்பூரை அடைந்து, காங்கயம் வரை சென்று சேர்ந்துள்ளது. பிரதான வாய்க்காலில் இருந்து, கிளை வாய்க்கால்களில் தண்ணீர் திறந்து, வினியோகம் செய்யப்படுகிறது.
தென்னை மற்றும் காய்கறி பயிர் செய்துள்ள விவசாயிகள், பாசன நீரை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக, பெருந்தொழுவு ரோடு, அமராவதி நகர் வழியாக, கிளை வாய்க்காலில் தண்ணீர் சென்று கொண்டிருப்பதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
'ஆட்டம்' போடும்இளைஞர்கள் திருப்பூருக்கு அருகில் இருக்கும் ஒரே நீர்நிலை பி.ஏ.பி., வாய்க்கால் மட்டுமே. இதனால் பள்ளி, கல்லுாரி மாணவர்கள், தொழிலாளர்கள், வாகன ஓட்டுனர்கள் குளிப்பதற்காக வாய்க்காலை நோக்கி படையெடுக்கின்றனர்.  இதுதவிர மது அருந்துவதற்கு வருபவர்களும் அதிகம்.
குளிக்க வரும் பலருக்கு நீச்சல் தெரிவதில்லை.  பி.ஏ.பி., வாய்க்கால் மேடான இடத்திலிருந்து பள்ளத்தை நோக்கி பாய்கிறது. வாய்க்காலின் அமைப்பு காரணமாக நீரோட்டத்தின் வேகம் அதிகம். நீச்சல் தெரியாததாலும், மது மயக்கத்தாலும் வாய்க்கால் தண்ணீரில் மூழ்கி பலர் பலியாகி வருகின்றனர்.
பல பெற்றோர் தங்கள் குழந்தைகளை பறிகொடுத்து விட்டு வாய்க்கால் கரையில் நின்று கொண்டு கதறி அழுவது அடிக்கடி நிகழ்கிறது.
உயிரிழப்பு ஏற்பட்டு பிரச்னை அதிகரிக்கும் பொழுது போலீசார் வாய்க்காலை நோக்கி வருகின்றனர். சில நாட்கள் கெடுபிடி காட்டுகின்றனர். அதன் பின் யாரும் அதைப்பற்றி கண்டு கொள்வதில்லை.
மாதத்தில் ஒன்றிரண்டு நபர்களாவது வாய்க்காலில் மூழ்கி உயிரிழப்பது தொடர் கதையாகி வருகிறது. உயிரிழப்பை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு.

