/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நொய்யலில் நீந்தி விளையாடுவது நல்லதுதானா? காத்திருக்கும் ஆபத்து: கண்டுகொள்ளாவிடில் பேராபத்து
/
நொய்யலில் நீந்தி விளையாடுவது நல்லதுதானா? காத்திருக்கும் ஆபத்து: கண்டுகொள்ளாவிடில் பேராபத்து
நொய்யலில் நீந்தி விளையாடுவது நல்லதுதானா? காத்திருக்கும் ஆபத்து: கண்டுகொள்ளாவிடில் பேராபத்து
நொய்யலில் நீந்தி விளையாடுவது நல்லதுதானா? காத்திருக்கும் ஆபத்து: கண்டுகொள்ளாவிடில் பேராபத்து
ADDED : மே 24, 2025 11:13 PM

தெளிந்த நன்னீருடன், மூலிகை செடிகள் நிறைந்த கோவை வெள்ளியங்கிரி மலையில் உற்பத்தியாகி வழிந்தோடி வரும் நீரை ஆதாரமாக கொண்டு உற்பத்தியாகும் ஆறு தான் நொய்யல்.
ஒரு காலத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் மாவட்டங்களில், விவசாயம் செழிக்க, முப்போகம் விளைச்சல் பெற, நீர் வளத்தை வாரி வழங்கிய பெருமை நொய்யல் நதிக்கு உண்டு. மூலிகை கலந்து வழிந்தோடி வந்த நீரை, குடிநீராக கூட மக்கள் பயன்படுத்தி வந்தனர் என்பது வரலாறு. குடிக்க, குளிக்க என, நொய்யல் நீர், மக்களின் பிரதான நீராதாரமாக இருந்திருக்கிறது. விடுமுறை மற்றும் கோடை நாட்களில், நொய்யல் ஆற்றில் குதித்து, குளித்து, நீராடி மகிழ்ந்த சிறுவர்களும், பெரியவர்களும் ஏராளம்.
ஆனால், இன்று...நொய்யல் நதியின் நிலை, மிகவும் கவலைக்கிடமாக இருக்கிறது. தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள், ஆற்றங்கரையோரமுள்ள குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுகளால் நிரம்பி, அசுத்தத்தின் அடையாளமாக மாறிப்போயிருக்கிறது. கிட்ட நடந்தாலே எட்டி ஓட வைக்கும் துர்நாற்றம் வீசும் நிலையில் தான், நொய்யல் நதி, கதியிழந்திருக்கிறது.
இதனால், நொய்யல் ஆற்று பாசனத்தை நம்பியிருந்த விவசாயம் பொய்த்துப் போயிருக்கிறது. மனிதர்கள், கால்நடைகளுக்கு நோய்கள் இலவசம் என்ற நிலை உருவாகியிருக்கிறது. தெளிந்த நன்னீர் என்ற நிலை அறவே ஒழிந்து, கருமையும், செந்நிறமும் கலந்து வரும் 'கழிவுநீர் சங்கமம்' என்ற நிலையில் தான் நொய்யல் நதி, உருக்குலைந்திருக்கிறது.
தற்போது கோடை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், நொய்யல் ஆற்றில் குழந்தைகள் குதித்து, நீந்தி விளையாடுகின்றனர்.
இது, அவர்களின் உடல் ஆரோக்கியத்துக்கு உகந்ததா...? நீர்வளத்துறை, மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தினர் மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தினரும் இதுதொடர்பான விழிப்புணர்வு அறிவிப்பை வெளியிடுவது அவசரமான அவசியம்.