/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மொரட்டுப்பாளையத்தில் குப்பை கொட்டுவதா?
/
மொரட்டுப்பாளையத்தில் குப்பை கொட்டுவதா?
ADDED : ஆக 21, 2025 11:17 PM

திருப்பூர்; திருப்பூர் மாநகரில் சேகரமாகும் குப்பை கழிவுகள் ஊத்துக்குளி அருகேயுள்ள மொரட்டுப்பாளையம் பகுதியில் உள்ள பாறைக்குழிகளில் கொண்டு சென்று கொட்டுவதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் போலீசாரால் குண்டுக்கட்டாகத் துாக்கிச் சென்று கைது செய்யப்பட்டனர். இது, அப்பகுதியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
நேற்று முன்தினம் வெள்ளியம்பாளையத்தில் அனைத்து கட்சி நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் ஊர்ப் பிரமுகர் அண்ணாதுரை தலைமையில் நடந்தது.
குப்பை பிரச்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது போலீசார் நடவடிக்கையை கண்டிப்பது; ஊத்துக்குளி ஒன்றியப் பகுதியில் உள்ள பாறைக்குழிகளில் எந்த இடத்திலும், மாநகராட்சி கொண்டு வரும் குப்பைக்கழிவுகளை கொட்டக் கூடாது.
அறிவியலுக்கு புறம்பாகவும், மாசுக்கட்டுப்பாட்டு விதிகளை மீறியும் பாறைக்குழியில் குப்பை கொட்டுவதை தவிர்க்க வேண்டும். அவ்வாறு வரும் வாகனங்கள் தடுத்து சிறை பிடிக்கப்படும்.
மாநகராட்சி நிர்வாகத்தின் போக்கைக் கண்டித்து வரும் 25ம் தேதி காலை 9:00 மணிக்கு வெள்ளியம்பாளையத்தில் அனைத்து கட்சி, விவசாயிகள் அமைப்பு மற்றும் பொதுமக்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. நேற்று காலை அனைத்து கட்சி நிர்வாகிகள், ஊத்துக்குளி தாசில்தாரைச் சந்தித்து இது குறித்து மனு அளித்தனர்.
தி.மு.க., ஒன்றிய செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் சக்திவேல், காங். வட்டார தலைவர் மனோஜ்குமார், மா.கம்யூ., குமார், இ.கம்யூ., சரவணன், தே.மு.தி.க., வேலுசாமி, பா.ஜ., தமிழ்மணி, விவசாயிகள் சங்கம் கவுரீஸ்வரன், பழனிசாமி, முன்னாள் ஊராட்சி தலைவர்கள் பிரபு, துரைசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.