/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
3 சக்கர சைக்கிள் வழங்கியதில்... இப்படியுமா! மாற்றுத்திறனாளிகள் 'அப்செட்'
/
3 சக்கர சைக்கிள் வழங்கியதில்... இப்படியுமா! மாற்றுத்திறனாளிகள் 'அப்செட்'
3 சக்கர சைக்கிள் வழங்கியதில்... இப்படியுமா! மாற்றுத்திறனாளிகள் 'அப்செட்'
3 சக்கர சைக்கிள் வழங்கியதில்... இப்படியுமா! மாற்றுத்திறனாளிகள் 'அப்செட்'
ADDED : ஜன 29, 2024 11:47 PM

திருப்பூர்;திருப்பூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில், கால் பாதித்த மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
கலெக்டர் கிறிஸ்துராஜ், மாற்றுத்திறனாளிகளுக்கு சைக்கிள் வழங்கினார். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் வசந்தராமகுமார் உட்பட அதிகாரிகள் பங்கேற்றனர். மாற்றுத்திறனாளிகள் 5 பேருக்கு, தலா 9,050 ரூபாய் மதிப்பிலான மூன்று சக்கர சைக்கிள் இலவசமாக வழங்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்குவதற்காக மூன்று சக்கர சைக்கிள்கள் வந்திறங்கி, இரண்டு மாதங்களுக்குமேலாகிறது. பாகங்கள் ஒன்றுசேர்க்கப்பட்டு, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் அருகிலேயே மாதக்கணக்கில் நிறுத்தப்பட்டுள்ளது.
நேற்று வழங்கிய, மூன்று சைக்கிள்களில், மூன்று சக்கரங்களிலும் காற்று முழுமையாக இறங்கியிருந்தது. இதனை கூட கவனிக்காமல், மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கு வதற்காக சைக்கிளை கொண்டு வந்து நிறுத்திவிட்டனர். கலெக்டரும், சைக்கிள் வழங்கும் நிகழ்வு முடிந்து வேகமாக புறப்பட்டு சென்று விட்டார்.
சைக்கிள் மீது அமர்ந்த மாற்றுத்திறனாளிகள், கைகளால் ஆர்வமுடன் ஓட்ட முயன்றபோதுதான், சக்கரங்களில் காற்று இல்லாதது தெரிய வந்தது. 'அப்செட்' ஆன மாற்றுத்திறனாளிகள், சைக்கிளில் இருந்து கீழே இறங்கினர். மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக பணியாளர்கள், காற்று இறங்கிய சைக்கிள்களுக்கு காற்றடித்தனர்; வால்டியூப் பஞ்சரான சைக்கிளுக்கு பதில், இருப்பில் இருந்த வேறு சைக்கிள் வழங்கினர்.
நீண்ட நாட்கள் நிறுத்தப்பட்டிருந்ததால், சைக்கிள் இருக்கை, சக்கரங்களில் துாசி படர்ந்திருந்தது. 'இலவசம் என்பதற்காக இப்படியா' என நொந்து கொண்டே, மாற்றுத்திறனாளிகள், தங்களிடமிருந்து துணியால், துாசியை துடைத்து, சைக்கிளை ஓட்டிச்சென்றனர்.
வி.ஐ.பி.,க்களின் அனுமதி, உயர் அதிகாரிகளின் வருகையை எதிர்பார்த்து, மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்களை, நீண்டநாட்கள் இருப்பு வைப்பதை தவிர்க்க வேண்டும்; பயனாளிகளுக்கு, உரிய காலத்துக்குள் உபகரணங்களை வழங்கவேண்டும்.