ADDED : ஆக 11, 2025 11:42 PM

திருப்பூர்; இடுவாய் கிராம பொதுமக்கள் நுாறுபேர் திரண்டு வந்து, கோவில் நிலங்களில் குப்பை கொட்டுவதை நிறுத்தக்கோரி மனு அளித்தனர்.
அப்பகுதி மக்கள் கூறியதாவது:
வஞ்சிபாளையம், கரைப்புதுார், தாந்தோணி அம்மன் நகர், இடுவாய், மகாலட்சுமி நகர் பொதுமக்கள் வந்துள்ளோம். எங்கள் ஊரில், கரியகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது.
இந்த கோவிலுக்கு சொந்தமான 19.93 எக்டர் நிலம், திருப்பூர் தெற்கு தாலுகா, வீரபாண்டி கிராமம், க.ச.,39ல், உள்ளது. அருகிலேயே, இடுவாய் அழகிய பெருமாள் கோவிலுக்கு சொந்தமான 11.21 சென்ட் நிலம், குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது.
இருகோவில்களுக்கு சொந்தமான நிலங்களிலும், வார்டு பகுதிகளில் சேகரமாகும் குப்பைகளை கொட்டுவதற்கு, திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
கடந்த 8ம் தேதி, காலை, 10:00 மணிக்கு, கரியகாளியம்மன் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் குப்பை கொட்டப்பட்டது. இதை பார்த்த பொதுமக்கள், தடுத்து நிறுத்தி, போராட்டம் நடத்தியதையடுத்து, கொட்டிய குப்பைகளை எடுத்துச்சென்றுவிட்டனர்.
இந்நிலையில், அழகிய பெருமாள் கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் குப்பை கிடங்கு அமைக்க நடவடிக்கை எடுத்துவருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்களை, போலீசாரை கொண்டு எச்சரிக்கை செய்துள்ளனர். கோவில் நிலத்தை, ஊர் பொதுமக்கள் நல்ல முறையில் பராமரித்து, மரங்கள் நட்டு வளர்த்து வருகிறோம். அருகாமையிலேயே விவசாய நிலங்களும் உள்ளன.
சுற்றுப்பகுதி குடியிருப்புகளில் ஐந்தாயிரம் பேர் வசிக்கிறோம். இப்பகுதியில் குப்பை கழிவுகளை கொட்டுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்வது, மக்களை புண்படுத்துகிறது.
கோவில் நிலங்களில் குப்பை கொட்டும் நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் கைவிடவேண்டும். இதற்கு உரிய சட்ட நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளவேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.