/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குழாய் வழியாக பி.ஏ.பி., பாசன திட்டம் சாத்தியமா?
/
குழாய் வழியாக பி.ஏ.பி., பாசன திட்டம் சாத்தியமா?
ADDED : ஜன 10, 2025 04:23 AM
திருப்பூர்; 'பரம்பிக்குளம் - ஆழியாறு நீர்பாசனத்தில் குழாய் வழியாக நீர் கொண்டு வரும் வகையில் புனரமைப்பு பணி மேற்கொள்ளப்பட வேண்டும்' என, விவசாயிகள் சங்கத்தினர் வற்புறுத்தியுள்ளனர்.
பி.ஏ.பி., எனப்படும் பரம்பிக்குளம் - ஆழியாறு நீர்பாசன திட்டத்தில், கோவை, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள, 3.77 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. இக்கால்வாய் கிட்டதட்ட, 5,000 கோடி ரூபாய் செலவில் புனரமைக்க, மாநில நீர்வளத்துறை முடிவெடுத்து, அதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடந்து வருகிறது.
இந்நிலையில், பி.ஏ.பி., வெள்ளக்கோவில் (காங்கயம் - வெள்ளகோவில்) கிளை கால்வாய் நீர் பாதுகாப்பு சங்க தலைவர் வேலுசாமி, மத்திய நீர்வள ஆணையத்துக்கு கடிதம் அனுப்பினார். அவர் கூறியதாவது:
காமராஜர் ஆட்சியில் அமைக்கப்பட்ட பி.ஏ.பி., கால்வாய், சிமென்ட் கான்கிரீட்டால் அமைக்கப்பட்டுள்ளது. கால்வாயில் குப்பைக் கொட்டுவது, கால்வாயில் வரும் நீரை திருடி, விவசாயம் அல்லாத வேறு பயன்பாட்டுக்கு பயன்படுத்துவது போன்ற பல்வேறு பிரச்னைகளால், பெருமளவு நீரிழப்பு ஏற்படுகிறது.
தற்போது, 5,000 கோடி ரூபாய் செலவில் கால்வாயை புனரமைக்க திட்ட அறிக்கை தயாரித்து வருகின்றனர். இதுபோன்ற பெரியளவு தொகையை பயன்படுத்தி புனரைமைப்பு மேற்கொள்ளும் வாய்ப்பு இனி மேல் கிடைக்காது. எனவே, தொலை நோக்கு திட்டத்துடன், கால்வாய் புதுப்பிப்பு பணி மேற்கொள்ள வேண்டும்.
இந்த வாய்ப்பை காலத்துக்கு ஏற்ற மாதிரி பயன்படுத்திக் கொள்ள வேண்டும். திறந்தவெளி கால்வாயை புனரமைப்புக்கு பதிலாக, அத்திக்கடவு - அவிநாசி நீர் செறிவூட்டும் திட்டம் போன்று குழாய் வழியாக, நீர் வினியோகிக்கும் வகையில் திட்டம் தயாரிக்க வேண்டும் என, மாநில நீர்வளத்துறை மற்றும் மத்திய நீர் வள ஆணையத்துக்கு கடிதம் அனுப்பியிருந்தோம்.
அதற்கு விளக்கமளித்து மத்திய நீர் வள ஆணையம், 'பி.ஏ.பி., வாய்க்கால் புனரமைப்பு தொடர்பான திட்ட அறிக்கை தங்களுக்கு வரவில்லை. இப்பணியை மாநில அரசு தான் மேற்கொள்ள வேண்டும். தங்கள் கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்க, மாநில அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

