/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாநகராட்சி நிர்வாகம் செயல்படுகிறதா? புகார்களை பட்டியலிட்டு அ.தி.மு.க., கவுன்சிலர் கேள்வி
/
மாநகராட்சி நிர்வாகம் செயல்படுகிறதா? புகார்களை பட்டியலிட்டு அ.தி.மு.க., கவுன்சிலர் கேள்வி
மாநகராட்சி நிர்வாகம் செயல்படுகிறதா? புகார்களை பட்டியலிட்டு அ.தி.மு.க., கவுன்சிலர் கேள்வி
மாநகராட்சி நிர்வாகம் செயல்படுகிறதா? புகார்களை பட்டியலிட்டு அ.தி.மு.க., கவுன்சிலர் கேள்வி
ADDED : ஜூலை 25, 2025 11:43 PM

திருப்பூர்; ப்பை அகற்றும் பிரச்னையில், மாநகராட்சி நிர்வாகம் செயல்படுகிறதா, என மண்டல குழு கூட்டத்தில், அ.தி.மு.க., கவுன்சிலர் பிரச்னைகளை பட்டியலிட்டதால், பரபரப்பு நிலவியது.திருப்பூர் மாநகராட்சி, 4வது மண்டல குழு கூட்டம் நேற்று முருகம்பாளையம் மண்டல அலுவலகத்தில் நடைபெற்றது. மண்டல குழு தலைவர் பத்மநாபன் தலைமை வகித்தார். துணை மேயர் பாலசுப்ரமணியம், உதவி கமிஷனர் வினோத், உதவி பொறியாளர் ஆறுமுகம் முன்னிலை வகித்தனர்.
கவுன்சிலர்கள் விவாதம் வருமாறு:
அன்பகம் திருப்பதி (மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர்): -மாநகராட்சி நிர்வாகம் செயல்படுகிறதா இல்லையா என்றே தெரியவில்லை. அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள் இருக்கிறார்களா, ஏதேனும் பணி செய்கின்றனரா என்றும் தெரியவில்லை. வார்டு பகுதிகளில் தார் ரோடு பிரச்னை, குடிநீர் பற்றாக்குறை, தெருவிளக்கு எரிவதில்லை என தொடர்ந்து பிரச்னைகள் வரிசை கட்டி நிற்கின்றன. மாநகராட்சி குப்பை அகற்றும் பிரச்னையில் இதுவரை எந்த நிரந்தர தீர்வும் காணப்படவில்லை. மாநகராட்சி இதனை பொருட்படுத்தியது போன்றே எந்த இடத்திலும் தெரியவில்லை. கவுன்சிலர்கள் சொல்வதை எந்த அதிகாரியோ, ஒப்பந்த நிறுவனத்தினரோ கேட்பதே இல்லை. வார்டு பகுதிகளில் குப்பை சேகரிக்க வாகனங்கள் இல்லை. அதேபோல் துாய்மைப் பணியாளர்களும் இல்லை.
சேகர் (அ.தி.மு.க.,): தெருவிளக்குகள், மின் கம்பங்கள் பல இடங்களில் பழுதாகி பயன்படுத்த முடியாத நிலையிலும், பயன்தராத நிலையிலும் உள்ளன. பல ஆண்டுகளாக காலேஜ் ரோடு, சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என மண்டல கூட்டங்களில் தொடர்ந்து வலியுறுத்து வருகிறேன். ஆனால் துரும்பைக் கூட இந்த நிர்வாகம் அசைத்துப் போடவில்லை. நாளுக்கு நாள் ஆக்கிரமிப்பு அதிகரித்து போக்குவரத்து அவதியும், சிறு விபத்துகளும் நிகழ்ந்து வருகிறது.
சாந்தி (தி.மு.க.,): லிட்டில் பிளவர் நகரில், ஆழ்குழாய் கிணறு மோட்டார் பழுதாகி விட்டது. அது சர்வீஸ் செய்தும் பயனில்லை. புதிய மோட்டார் பொருத்த வேண்டும். முல்லை நகரில், சாக்கடை கால்வாயில் கழிவு நீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. சாக்கடை கழிவுகள் அகற்ற வேண்டும்.
மணிமேகலை (மா.கம்யூ.,): வார்டு பகுதியில் புதிய தார் ரோடு அமைக்க திட்டமிட்டு, பல இடங்களில் பூமி பூஜை போடப்பட்டது. ஆனால், இது வரை எந்த இடத்திலும் தார் ரோடு பணி நடக்கவில்லை. நொச்சிப்பாளையம் பிரிவில், மழை நீர் வடிகால் வசதி இல்லை. இதனால், மழை நாட்களில் மழைநீரும், மற்ற நாட்களில் கழிவுநீரும் ரோட்டில் தேங்கி நிற்கிறது. பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் தினமும் அல்லலுக்கு ஆளாகின்றனர்.
சாந்தாமணி (தி.மு.க.,): கண்ணன் நகர் பகுதியில் பல ஆண்டாக பாதாள சாக்கடை வசதி இல்லாமல், கழிவுநீர் செல்ல முடியாமல் வீடுகள் அருகே தேங்கிகிடக்கிறது. இதனால் தொற்று நோய் பரவவு அபாயம் உள்ளது. பல இடங்களில் தெருவிளக்கு பிரச்னை தீர்க்கப்படாமலே உள்ளது. அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தாலும் எந்தப் பயனும் இல்லை.
கவிதா (தி.மு.க.,): திருக்குமரன் நகர், வள்ளலார் நகர் பகுதிகளில் சாக்கடை கால்வாய் வசதி இல்லை. கழிவுகள் வீட்டின் முன்புறம், ரோட்டில், தேங்கி நிற்கிறது. தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கால்வாய் கட்டுமானப் பணிகளை விரைந்து மேற்கொண்டு செய்து முடிக்க வேண்டும். சமுதாய நலக்கூடம் சீரமைக்க வேண்டும் என்று பல மாதங்களாக தொடர்ந்து கோரி வருகிறேன். கூடத்தைப் பயன்படுத்த முடியாமல் வீணாகி வருகிறது.
நடவடிக்கை எடுக்கப்படம்
கவுன்சிலர்களின் கோரிக்கைகளுக்கு பதிலளித்து, மண்டல தலைவர் பத்மநாபன் பேசுகையில், ''மண்டலத்துக்கு உட்பட்ட அனைத்து வார்டுகளிலும், அடிப்படை பிரச்னையாக உள்ள குடிநீர், தார் ரோடு, தெரு விளக்குகள், சாக்கடை, திடக்கழிவு மேலாண்மை போன்ற பிரச்னைகளுக்கு தீர்வு காணும், வகையில், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் மாநகராட்சி அலுவலர்கள், ஒப்பந்த நிறுவனங்கள், கவுன்சிலர்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும். அப்போது தான் மக்கள் பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியும்,'' என்றார்.
விவாத்தின் போது, அலுவலர்களுக்கும், ஒப்பந்த நிறுவன ஊழியர்களுக்கும், கவுன்சிலர்களுடன் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் நேற்று நடைபெற்ற மண்டல கூட்டம் துவக்கம் முதல் கடைசி வரை பரபரப்பாகவே இருந்தது