/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வங்கியில் நகைக்கடன் பெறும் நடைமுறை எளிமையாகுமா?
/
வங்கியில் நகைக்கடன் பெறும் நடைமுறை எளிமையாகுமா?
ADDED : பிப் 15, 2025 07:14 AM
திருப்பூர்; தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், தனியார் வங்கிகள் மற்றும் கூட்டுறவு கடன் சங்கங்களில், நகைக்கடன் வழங்கப்படுகிறது. விவசாய பணிகளுக்கான நகைக்கடன், மிக குறைந்த வட்டியில் வழங்கப்படுகிறது.
ஓராண்டு தவணையுடன் நகைக்கடன் வழங்கப்படுவது வழக்கம். வங்கியில், நகைகளை அடமானமாக வைத்து கடன் பெறுவதால், ஓராண்டு வரை வட்டி செலுத்தலாம்; அசல் தொகையையும் தவணையாக செலுத்தலாம்.
வட்டி மற்றும் அசல் செலுத்த முடியாத சூழல், தவணை முடியும் போது, வட்டியை மட்டும் செலுத்தி, நகைக்கடனை புதுப்பிக்கும் நடைமுறை உள்ளது.
இந்தாண்டு, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில், நகைக்கடன்களை கணக்கு முடிக்க, வட்டி மற்றும் அசல் இரண்டையும் செலுத்த வேண்டுமென கட்டாயப்படுத்துவதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து ஊத்துக்குளி பகுதி விவசாயிகள் கூறியதாவது:
வங்கிகளில் நகைக்கடன் பெற்றுத்தான், விவசாயிகளின் வழக்கமான அனைத்து பணிகளும் நடக்கின்றன.
நகைக்கடனை புதுப்பிக்க, வட்டியை மட்டும் செலுத்தி, புதிய நகைக்கடனாக மாற்றும் வசதி இருந்தது.
தற்போது, வட்டியுடன் அசலையும் செலுத்த வேண்டுமென கட்டாயப்படுத்துகின்றனர். அதற்காக, மற்றொரு கடன் பெற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
விவசாய பணிகள் தடையின்றி நடக்க ஏதுவாக, பழைய நடைமுறையில், வட்டியை மட்டும் வசூலித்துவிட்டு, நகைக்கடனை புதுப்பித்து கொடுக்கும் நடைமுறையை வங்கிகள் பின்பற்ற, மாவட்ட நிர்வாகம் ஆவன செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

