தனித்துவ அடையாள எண் திட்டம் முழுமைபெறுமா? வேளாண் களப்பணியாளர்கள் யோசனை
தனித்துவ அடையாள எண் திட்டம் முழுமைபெறுமா? வேளாண் களப்பணியாளர்கள் யோசனை
ADDED : ஆக 24, 2026 09:53 PM

திருப்பூர், ஆக. 25–
பயிர்க்கடன், அரசு மானியங்கள் மற்றும் மானிய விலை உரங்களைப் பெற, விவசாயிகள் தங்களது அனைத்து நில விவரங்களையும் ‘விவசாய அடையாள எண்ணுடன்’ பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால், நில ஆவணங்களில் உள்ள குளறுபடிகளால், 100 சதவீதம் துல்லியமாகப் பதிவு செய்வதில் சிக்கல் நீடிக்கிறது.
வேளாண்மைத் துறை சார்பில் விவசாயிகளுக்கு உழவர் தனித்துவ அடையாள எண் வழங்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே எண் பெற்ற பலர் ஒரு பட்டாவை மட்டுமே பதிவு செய்துள்ள நிலையில், இனி அடையாள எண்ணில் பதிவு செய்யப்பட்ட நிலங்களுக்கு மட்டுமே பயிர்க்கடன், மானிய விலை உரங்கள் உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்பட உள்ளன. எனவே, அனைத்து பட்டாக்கள், ஆதார் மற்றும் ஆதாருடன் இணைக்கப்பட்ட செல்போன் எண்ணுடன் வேளாண் விரிவாக்க மையங்களை அணுகி விடுபட்ட நில விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கூட்டுப்பட்டா சிக்கல்
தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் 98 சதவீதப் பணிகள் முடிந்துள்ளன. இருப்பினும், 100 சதவீதம் துல்லியமாகப் பதிவு செய்ய வேண்டிய நிலையில், பெரும்பாலான நிலங்கள் கூட்டுப்பட்டாவாக இருப்பது சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. பாகப்பிரிவினை செய்து தனிப்பட்டா பெறாதது, நில உரிமையாளர்கள் வெளியூர், வெளிநாடுகளில் வசிப்பது உள்ளிட்ட காரணங்களால் பணிகள் தாமதமாகின்றன.
மேலும், விவசாய நிலங்கள் முறையாக நிலப்பயன்பாட்டு மாற்றம் செய்யப்படாமல் வீட்டுமனைகளாகவும், கட்டடங்களாகவும் மாறியுள்ளதால், ஆவணங்களில் இன்னும் விவசாய நிலமாகவே தொடர்கிறது. இதனால், உண்மையான விவசாயிகளை அடையாளம் காண்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சிறப்பு முகாம் தேவை
பட்டா பெயர் மாற்றம், நிலப்பயன்பாட்டு முரண்பாடுகளைச் சரிசெய்ய கிராம, நகர அளவில் வருவாய்த்துறை சார்பில் சிறப்பு முகாம்கள் நடத்த வேண்டும். இதன் மூலம் விவசாய அடையாள எண் திட்டத்தை 100 சதவீதம் துல்லியமாகச் செயல்படுத்த முடியும் என களப்பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
