UPDATED : அக் 09, 2026 10:30 PM
ADDED : அக் 09, 2026 10:04 PM

திருப்பூர்: மாநகராட்சி 40வது வார்டுக்கு உட்பட்ட இடுவம்பாளையம் கிழக்கு வண்டிக்காடு பகுதியில், வழக்கம்போல் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. ஆனால், தண்ணீர் கலங்கிய நிலையில் வந்ததால், அதிர்ச்சியடைந்த மக்கள் ஆபரேட்டருக்குத் தகவல் தெரிவித்தனர். இருப்பினும், இரண்டு மணி நேரம் தண்ணீர் வினியோகம் நிறுத்தப்படவில்லை.
சேறும் சகதியும் கலந்ததுபோல் வந்த தண்ணீரைப் பயன்படுத்த முடியாததால், பொதுமக்கள் பிடிக்காமல் அப்படியே வெளியேற்றினர். தொட்டியில் சேமித்து வைத்துள்ள நல்ல தண்ணீரும் மாசடைந்துவிடும் என்ற அச்சமும் ஏற்பட்டது.
வாரத்தில் ஒருநாள் மட்டுமே குடிநீர் வினியோகிக்கப்படும் நிலையில், அதுவும் பயன்படுத்த முடியாத அளவுக்கு வந்ததால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.
டெங்கு காய்ச்சல் பரவும் சூழலில், சுகாதாரத்தைப் பாதுகாக்க வேண்டிய மாநகராட்சி நிர்வாகமே இவ்வாறு கலங்கிய குடிநீரை வினியோகிப்பதா என அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
கலங்கிய நிலையில் வினியோகிக்கப்பட்ட குடிநீர்.
