ADDED : அக் 11, 2025 06:09 AM

திருப்பூர்; திருப்பூர், தென்னம்பாளையத்தைச் சேர்ந்தவர் சுப்ரமணியம். அவருக்குச் சொந்தமான கார் (டிஎன்.39 பிஏ 1155) உள்ளது. காருக்கு தகுதிச் சான்று பெற ஆவணங்களை தயார் செய்தார். அப்போது, முசிறி போக்கு வரத்து போலீஸ் விதித்த அபராத சலான் நிலுவையில் உள்ளதாக ஆன்லைனில் தெரிய வந்தது.
ஆவணத்தைப் பதிவிறக்கம் செய்து பார்த்ததில், ஒரு பைக்கின் படம் இடம் பெற்றிருந்தது. இதுதவிர, டிரைவிங், நடத்துனர் உரிமம், பதிவுச் சான்று, தகுதிச் சான்று, இன்சூரன்ஸ் சான்று ஆகியன வாகன சோதனையின் போது, காண்பிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுப்பிரமணியம் கூறுகையில், 'கார் பதிவெண் குறிப்பிட்டு, பைக்குக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. வேறு வழியின்றி அபராதத்தை நான் செலுத்த வேண்டியுள்ளது. போலீசாரின் கவனக்குறைவால் இதுபோல் நடக்கிறது.
திருப்பூரில் வீட்டில் நிறுத்தியிருந்த கார் மீது திருச்சியில் எப்படிஅபராதம் விதிக்கப்படுகிறது? போலீசார் மெத்தனமாக செயல்பட்டுள்ளனர்,'' என்றார்.