/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆற்றங்கரையில் கொட்டப்பட்ட குப்பை இதுதான் திடக்கழிவு மேலாண்மையா?
/
ஆற்றங்கரையில் கொட்டப்பட்ட குப்பை இதுதான் திடக்கழிவு மேலாண்மையா?
ஆற்றங்கரையில் கொட்டப்பட்ட குப்பை இதுதான் திடக்கழிவு மேலாண்மையா?
ஆற்றங்கரையில் கொட்டப்பட்ட குப்பை இதுதான் திடக்கழிவு மேலாண்மையா?
ADDED : ஜன 21, 2026 07:15 AM

திருப்பூர்: திருப்பூரில் திடக்கழிவு மேலாண்மை விதி அமலில் உள்ள நிலையில் நொய்யல் ஆற்றங்கரையில் மாநகராட்சி குப்பை அள்ளும் வாகனத்தில் கொண்டு வரப்பட்ட குப்பைகள் கொட்டப்பட்டு, எரியூட்டப்பட்டது. இது, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.
திருப்பூரில் குப்பை பிரச்னை, மாநில அளவில் பேசு பொருளாக மாறியுள்ள நிலையில், திடக்கழிவு மேலாண்மை விதியை அமல்படுத்தியிருக்கிறது மாநகராட்சி நிர்வாகம். அதன்படி, வீடு, வீடாக சென்று, தரம் பிரிக்கப்பட்ட நிலையில் குப்பையை சேகரிப்பது, மக்கும் குப்பையை உரமாக்கவும், மக்காத குப்பையை மறு சுழற்சிக்கு அனுப்பும் பணியில் கவனம் செலுத்தி வருகிறது. அதே போன்று, கடைகளில் ஒரு முறை பயன்படுத்தி துாக்கி வீசப்படும் பாலிதீன் பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று மதியம், அணைப்பாளையத்தில், நொய்யல் ஆற்றின் இருபுறமும் குப்பை கழிவுகள் கொட்டப்பட்டு எரியூட்டப்பட்டன. இது சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது குறித்து, நொய்யல் விவசாயிகள் பாதுகாப்பு சங்க தலைமை ஒருங்கிணைப்பாளர் திருஞானசம்பந்தன் கூறியதாவது:
நொய்யல் ஆற்றையொட்டி வாகனத்தில், மாநகராட்சியில் துாய்மைப் பணி மேற்கொள்ள தனியார் ஒப்பந்த நிறுவன துாய்மை பணியாளர்களே மொத்தமாக குப்பையை எடுத்து வந்து கொட்டி, தீ மூட்டுகின்றனர்.
தரம் பிரிக்கப்படாமல், அனைத்து வகை குப்பைகளும் கொட்டப்படுகின்றன. இதனால் எழும் புகை, மூச்சுத்திணறலை ஏற்படுத்துகிறது; சுவாச பிரச்னை ஏற்படுகிறது.
வார்டு வாரியாக குப்பையை சேகரித்து, ஆங்காங்கே உள்ள, 29 நுண்ணுயிர் கூடங்கள் வாயிலாக, தரம் பிரித்து தான், அப்புறப்படுத்த வேண்டும் என ஐகோர்ட் வழிகாட்டியுள்ள நிலையில் இதுபோன்ற செயல், அதிர்ச்சி, ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மாவட்ட கலெக்டர், மாநகராட்சி கமிஷனர் கள ஆய்வு மேற்கொண்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.

