/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கேரளக் கழிவுகளுக்கு இங்குதானா குப்பைத்தொட்டி?
/
கேரளக் கழிவுகளுக்கு இங்குதானா குப்பைத்தொட்டி?
ADDED : அக் 25, 2025 01:16 AM

திருப்பூர்:
திருப்பூர் அருகே சாலையோரம் வீசப்பட்ட கேரளக்கழிவுகள், பொதுமக்களின் கடும் எதிர்ப்பு மற்றும் அதிகாரிகள் நடவடிக்கை காரணமாக அகற்றப்பட்டன. கழிவுகளை வீசியோர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுபோல் இனிமேல் நடைபெறாதவகையில் கண்காணிப்பும், கடும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்ட வேண்டும்.
தாராபுரம் - ஈரோடு ரோட்டில், சிறுகிணறு ஊராட்சி, நொச்சிபாளையம் பகுதியில், மூட்டை மூட்டையாக கழிவுகள் கொட்டப்பட்டுக் கிடந்தன. இரவு நேரத்தில் சரக்கு வாகனத்தில் இந்த கழிவுகள் கொண்டு வந்து வீசிச் சென்றது தெரிந்தது. அப்பகுதியினர் தகவல் அளித்து, ஒன்றிய அலுவலர்கள், சுகாதார துறையினர் நேரில் சென்று பார்வையிட்டனர்.
கழிவுகள் கட்டி வீசப்பட்டிருந்த சாக்கு பையில் இருந்த மஹாராஷ்டிரா நிறுவன முகவரியைத் தொடர்பு கொண்டு விசாரித்த போது, கேரள மாநிலம் ஆலுவா பகுதியில் உள்ள மசாலா உள்ளிட்ட உணவு பொருள் உற்பத்தி நிறுவனத்துக்கு மூலப் பொருட்கள் அனுப்பியது தெரிந்தது. அந்நிறுவனத்தை தொடர்பு கொண்ட அதிகாரிகள் இதுகுறித்து கேட்ட போது, துாய்மைப் பணி ஒப்பந்ததாரர் மூலம் அதை அனுப்பிய விவரம் தெரிந்தது. அவரைத் தொடர்பு கொண்டு விசாரித்த போது, ஒரு லாரியில் வாடகை பேசி கழிவு மூட்டைகளை அனுப்பியது தெரிந்தது. அவரை வரவழைத்து, கழிவுகளை வீசிச்சென்ற லாரியும் நேற்று முன்தினம் கொண்டு வரப்பட்டது. அதே லாரியில் பொக்லைன் மூலம் மூட்டைகள் ஏற்றப்பட்டது. பொது இடத்தில் கழிவுகளை கொட்டியதாக ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தது. அதன் பின், விதிகளை மீறி செயல்பட்டதாக ஊதியூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் அந்த லாரி மீது வழக்கு பதிவு செய்தனர். மேலும் கழிவு மூட்டைகள் திரும்பவும், அது ஏற்றப்பட்ட நிறுவனத்துக்கே திரும்ப கொண்டு சென்று ஒப்படைக்க அறிவுறுத்தப்பட்டது.
சமீபத்தில் பல்லடம் அருகே கிணற்றில் மூட்டை மூட்டையாக கழிவுகள் கொட்டப்பட்டன. இதேபோல், தொடர்ந்து சாலையோரம் கழிவுகள் வீசப்படுகின்றன.
சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: கேரளாவில் இருந்து மருத்துவ கழிவுகள், தொழிற்சாலை கழிவுகள் மாநில எல்லையோர மாவட்டங்களில் கொண்டு வந்து கொட்டுவது வாடிக்கையாக உள்ளது. கேரள கழிவுகளின் குப்பைத்தொட்டியாக தமிழகத்தை எண்ணியுள்ளனர். குறிப்பாக, திருப்பூரின் பல்வேறு இடங்களில் இவ்வாறு கொட்டப்படுவது தொடர்ந்து நடக்கிறது. மாநில, மாவட்ட எல்லைகளைக் கடந்து எந்த சோதனையிலும் சிக்காமல் இது போல் கழிவுகள் வருவது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. அனைத்து துறைகளும் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும். இது போல் விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டும்.

