/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விடா முயற்சியால் வசமானது வெற்றி: 'குரூப் - 4' தேர்வில் சாதித்தவர்கள் பேட்டி
/
விடா முயற்சியால் வசமானது வெற்றி: 'குரூப் - 4' தேர்வில் சாதித்தவர்கள் பேட்டி
விடா முயற்சியால் வசமானது வெற்றி: 'குரூப் - 4' தேர்வில் சாதித்தவர்கள் பேட்டி
விடா முயற்சியால் வசமானது வெற்றி: 'குரூப் - 4' தேர்வில் சாதித்தவர்கள் பேட்டி
ADDED : அக் 25, 2025 01:19 AM

திருப்பூர்: தொடர் பயிற்சியுடன், நம்பிக்கையுடன் கூடிய விடா முயற்சியின் பயனாக வெற்றி வசமானதாக, குரூப் - 4 தேர்வில் வெற்றி பெற்றவர்கள், கருத்து தெரிவித்தனர்.
கிராம நிர்வாக அலுவலர் - இளநிலை உதவியாளர், வன காவலர், வனக்காப்பாளர், தட்டச்சர் காலி பணியிடங்களுக்கான டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 4 தேர்வு, தமிழகத்தில் கடந்த ஜூலை 12ல் நடந்தது. 11 லட்சத்து 48 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர். தேர்வு முடிவுகள், கடந்த 22ம் தேதி வெளியாகின.
இதில், திருப்பூர் மாவட்டத்தில், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக பயிற்சி மையத்தில் இணைந்து, இலவசமாக பயிற்சி பெற்ற, ஐஸ்வர்யா, ஹவாஹீரா, சூரியபிரபா, ஜெகநாதன், ராஜசேகர், கோமதி, சூரியா, பிரேம் குமார் சந்தியா, மது ஸ்ரீ, ருக்மணி சுரேந்தர் ஆகியோர் குரூப் - 4 தேர்வில், தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இவர்களில் சிலர், வெற்றி குறித்து நம்முடன் பகிர்ந்தவை:
சவாலை எதிர்கொண்டேன்
சூர்யா, 24, நெருப்பெரிச்சல்: பி.எஸ்.சி., கணிதம் படித்துள்ளேன். தந்தை, பனியன் நிறுவனத்தில் கட்டிங் மாஸ்டர். எப்படியாவது அரசு அலுவலராகிவிடவேண்டும் என்ற ஆசையோடு, கடினமாக முயற்சி செய்தேன். இதற்கு முன் இரண்டு முறை குரூப் - 4 தேர்வு எழுதியிருக்கிறேன். தற்போது மூன்றாவது முயற்சியில், வெற்றி கிடைத்துள்ளது. தேர்வில், தமிழ் சார்ந்த கேள்விகள் கடினமாக கேட்கப்பட்டிருந்ததாக பலரும் தெரிவித்தனர். கடந்த பிப்., மாதம் நடந்த குரூப் -2 ஏ தேர்விலேயே, தமிழ் பாடப்பிரிவு கேள்விகள் கடினமானதாகவே அமைந்திருந்தன. அதனடிப்படையில் தேர்வுக்கு தயாரானதாலேயே, என்னால், திறம்பட தேர்வை எதிர்கொள்ள முடிந்தது. இளநிலை உதவியாளர் பணியிடம் கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன். தொடர்ந்து படித்து, அடுத்தடுத்த நிலைகளுக்கு உயரவேண்டும் என்பது எனது லட்சியம். முந்தைய தேர்வுகளின் கேட்கப்பட்ட கேள்விகள் அடிப்படையில் படிப்பது; முந்தைய தவறுகளை சரி செய்துகொள்வதன்மூலம், என்னைப்போலவே எல்லோரும் குரூப் தேர்வில் வெற்றி பெறமுடியும்.
அனுபவமே படிக்கட்டு
சந்தியா, 28, பாண்டியன் நகர்:
கடந்த 2022ல் குரூப் - 4 தேர்வு, 2024ல், குரூப் - 2ஏ தேர்வுகள் எழுதியபோதும் என்னால் வெற்றி பெறமுடியவில்லை. அந்த தேர்வுகளில் கிடைத்த அனுபவங்களையே படிக்கட்டுகளாக மாற்றி, தொடர்ந்து முயற்சி செய்தேன்.எனது முயற்சிக்கு, கணவர் உள்பட குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கைகொடுத்தனர். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக பயிற்சி மையத்தில் சேர்ந்து தேர்வுக்கு தயாரானேன். வேலைவாய்ப்பு அலுவலகத்தில், அவ்வப்போது மாதிரி தேர்வுகள் நடத்தப்படும். இதனை மாதிரி தேர்வு என்பதைவிட, ஒரிஜினல் குரூப் தேர்வு என்று சொல்லவேண்டும்; எல்லாவகையிலும் குரூப் தேர்வு போலவேதான் மாதிரித்தேர்வு நடத்தப்படுகிறது. தொடர்ந்து மாதிரித்தேர்வு எழுதியதால், குரூப் தேர்வை எவ்வித பதட்டமும் இன்றி, தைரியமாக எதிர்கொள்ள முடிந்தது. பன்முக முயற்சியின் பயனாக, இப்போது வெற்றி கிடைத்திருக்கிறது. டைப்பிங் முடித்திருப்பதால், தட்டச்சர் பணியை எதிர்பார்க்கிறேன்.
மனம் தளரக்கூடாது
கோமதி, 30, குமார் நகர்: கோவிட் காலம் முதலே, குரூப் தேர்வு எழுதிவருகிறேன். இதுவரை இரண்டு முறை குரூப்- 4 தேர்வு எழுதி, வெற்றியை நழுவவிட்டுள்ளேன். மூன்றாவது முயற்சியில் தற்போது, வெற்றி பெற்றிருக்கிறேன். அரசு பணியில் சேரவேண்டும் என்கிற எனது கனவு நனவாகியிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. ஒரே பாடத்தை தொடர்ந்து படித்தால் சலிப்பு ஏற்பட்டுவிட வாய்ப்பு உள்ளது. தினமும், தமிழ், கணிதம், பொது அறிவு என ஒவ்வொரு பிரிவுக்கும் நேரம் ஒதுக்கி படிக்கலாம். வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் நடத்தப்படும் மாதிரி தேர்வுகளை ஒருபோதும் தவறவிடக்கூடாது. குரூப் தேர்வு போலவே கடினமான கேள்விகள், புத்தகம் கடந்த கேள்விகளெல்லாம் மாதிரி தேர்வில் இடம்பெறும். மாதிரி தேர்வில் இடம்பெறும் வினாக்களுக்கும் முக்கியத்துவம் அளித்து படிக்கவேண்டும். குரூப் தேர்வுகளுக்கு தயாராகிவருவோர், எந்த சூழ்நிலையிலும் மனம் தளரக்கூடாது. தோல்விகளிலிருந்து கிடைக்கும் அனுபவங்களை, வெற்றிக்கான படிக்கட்டுகளாக மாற்றி, நம்பிக்கையோடு முன்னேறவேண்டும்; நிச்சயம் ஒருநாள் வெற்றி கைகூடும்.
சிறுவயது லட்சியம்
சுரேந்தர், 26, உடுமலை: அரசு பணியாளராகவேண்டும் என்பதையே சிறுவயது முதல் லட்சியமாக கொண்டு, குரூப் தேர்வுகளை எதிர்கொண்டேன். மூன்றாவது முயற்சியில் தற்போது, குரூப் - 4 தேர்வில் வெற்றி பெற்றிருக்கிறேன். எனது முயற்சியும், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் வாயிலாக கிடைத்த பயிற்சிகளும்தான் வெற்றியை ஈட்டித் தந்திருக்கின்றன. அரசு பணியில் இணைந்து சிறப்பாக பணிபுரிவேன். குரூப் தேர்வுக்கு தயாராவோர், மனம்தளராமல், தொடர்ந்து படிக்கவேண்டும்.

