ADDED : டிச 05, 2024 06:18 AM

பல்லடம், வடுகபாளையம் பகுதியில், அரசு கால்நடை மருத்துவமனை உள்ளது. காமராஜர் காலத்தில் கட்டப்பட்டு, 60 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமை வாய்ந்த இந்த மருத்துவமனை, கால்நடை மருந்தகமாக செயல்பட்டு வந்த நிலையில், கடந்த, ஐந்து ஆண்டுக்கு முன், மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. தரம் உயர்த்தப்பட்டதே தவிர, மருத்துவமனை பராமரிப்பில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை.
பாழடைந்த ஓட்டு கட்டடங்கள், உடைந்த ஜன்னல்கள், பராமரிப்பு இல்லாத மருத்துவமனை வளாகம் என, பரிதாப நிலையில் உள்ளது. மருத்துவமனை வளாகம் முழுவதும், முட்புதர்கள், விஷ செடிகள் உள்ளிட்டவை காடு போல் வளர்ந்துள்ளன. மருத்துவமனை சுற்றுச்சுவர் உடைந்து, இங்குள்ள பாழடைந்த கிணறு திறந்த நிலையில் உள்ளது. சமீபத்தில் கிணற்றுக்குள் அடையாளம் தெரியாத நபரின் சடலம் மீட்கப்பட்டது. மருத்துவமனை கட்டடங்கள் மற்றும் மருத்துவமனை வளாகத்தை பராமரிக்க வேண்டும்.

