ADDED : மே 20, 2025 11:52 PM
திருப்பூர்; பிளஸ் 2 மற்றும் பிளஸ் 1 பொதுத்தேர்விவில் நடப்பாண்டு திருப்பூர் மாவட்டம் சறுக்கலை சந்தித்துள்ளது.
கடந்தாண்டு, பிளஸ் 2ல் மாநில அளவில் முதலிடம் பெற்றது. பிளஸ் 1 மூன்றாமிடம் பெற்றது. நடப்பாண்டு, பிளஸ் 2 வில் இரண்டு இடங்கள் பின்தங்கி மூன்றாமிடமும், பிளஸ் 1 ல், ஐந்து இடங்கள் பின்தங்கி, எட்டாமிடம் பெற்றுள்ளது.
பத்தாம் வகுப்பு தேர்ச்சியில், 21வது இடத்தில் இருந்து நான்கு இடங்கள் முன்னேறி, 17வது இடத்துக்கு வந்தாலும், மாநில பட்டியலில் முதல் பத்து இடங்களுக்கு இல்லை என்பதால், மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள், தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா இல்லை என்பது உறுதியாகியுள்ளது.
அதேநேரம், நுாறு சதவீதம் ரிசல்ட் கொடுத்த தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் தமிழக அரசால் வழங்கப்படுகிறது.
இப்பட்டியலுக்கு, பிளஸ் 2 தேர்ச்சியின் அடிப்படையில், 18 பள்ளி, பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளின் அடிப்படையில், 38 அரசு பள்ளிகள், தலைமை ஆசிரியர் கொண்ட விபர பட்டியல் தயாரிக்கப்பட்டு, சென்னைக்கு அனுப்பபட்டுள்ளது. இவர்களுக்கு விரைவில் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.
இருப்பினும், 2023, 2024ம் ஆண்டு தேர்ச்சி சதவீதம் உயர்ந்து மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பாராட்டு விழா நடத்தி, அதில் பங்கேற்று பரிசு பெற்ற, தலைமை ஆசிரியர்கள், நடப்பாண்டு மாவட்ட அளவில் பாராட்டு விழா இல்லை என கவலையில் உள்ளனர்.