/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பயிர்களை காப்பீடு செய்வது அவசியம்! தோட்டக்கலைத்துறை 'அட்வைஸ்'
/
பயிர்களை காப்பீடு செய்வது அவசியம்! தோட்டக்கலைத்துறை 'அட்வைஸ்'
பயிர்களை காப்பீடு செய்வது அவசியம்! தோட்டக்கலைத்துறை 'அட்வைஸ்'
பயிர்களை காப்பீடு செய்வது அவசியம்! தோட்டக்கலைத்துறை 'அட்வைஸ்'
ADDED : அக் 23, 2025 10:51 PM
உடுமலை: பருவமழை காலத்தில், விளைநிலங்களில், உரிய வடிகால் வசதி ஏற்படுத்துவதுடன், பயிர்களை காப்பீடு செய்ய வேண்டும் என, தோட்டக்கலைத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
உடுமலை வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் கலாமணி கூறியதாவது: பருவமழை காலத்தில், தோட்டக்கலைப் பயிர்களுக்கான ஆயத்த நிலை ஏற்பாடுகளை விவசாயிகள் மேற்கொள்ள வேண்டும். சாகுபடி செய்யப்பட்ட பரப்பினை அடங்கல் மற்றும் இ-அடங்கலில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
நீர்பாசனம் மற்றும் உரமிடுதல் ஆகியவற்றை தற்காலிகமாக நிறுத்தி, மரங்களை சுற்றி மண் அணைத்து பாதுகாப்பு கொடுக்கலாம். கனமழை காரணமாக ஏற்படும் மழைநீர் தேக்கத்தை குறைக்க, உபரி நீர் வடிந்த பின் நடவு, விதைப்பு பணிகளை மேற்கொள்ளலாம்.
தோட்டக்கலைப் பயிர்களை உடனடியாக பயிர் காப்பீடு செய்ய வேண்டும். தென்னந்தோப்புகளில் உரிய நேரத்தில் தேங்காய் மற்றும் இளநீரை அறுவடை செய்வதால், காற்று மற்றும் புயலினால் ஏற்படும் சேதங்களைத் தவிர்க்கலாம்.
மரத்தின் கீழ் சுற்றிலும் உள்ள கனமான, பழைய ஓலைகளை வெட்டி அகற்றுவதால், மரத்தின் சுமையை குறைத்து காற்றினால் ஏற்படும் சேதத்தை தவிர்க்கலாம்.
மரத்தின் அடிப்பகுதியில் மண் அணைத்தல் வாயிலாக, வேர் பகுதிகளை பாதுகாக்கவும் நீர் தேக்கம் ஏற்படாமலும் தடுக்கலாம். தற்காலிகமாக நீர் மற்றும் உரமிடுவதை தவிர்த்து, மழைக்காலத்தில் ஏற்படும் வேர் அழுகல் நோய் மற்றும் ஊட்டச்சத்து இழப்பை தவிர்க்கலாம்.
மழைநீர் வடிகால் அமைப்புகள் உருவாக்குவதால், வேர் அழுகல் நோயை தவிர்க்கலாம்.வாழை சாகுபடியில், காற்றினால் பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் கீழ்மட்ட இலைகளை அகற்றிவிட்டு மரத்தின் அடியில் மண் அணைத்தல் வேண்டும்.
சவுக்கு அல்லது யூகலிப்டஸ் கம்புகளை ஊன்றுகோலாக பயன்படுத்தலாம். மரங்களை சுற்றிலும் சுத்தப்படுத்தி நல்ல வடிகால் வசதி அமைக்க வேண்டும். வாழைத்தார்களை முறையாக மூடிவைத்தல் வேண்டும். முதிர்ந்த வாழைத்தார்களை உடனடியாக அறுவடை செய்ய வேண்டும்.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

