/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மலைக்கிராமங்களில் சிறப்பு மருத்துவ முகாம் சுகாதாரத்துறை நடத்த எதிர்பார்ப்பு
/
மலைக்கிராமங்களில் சிறப்பு மருத்துவ முகாம் சுகாதாரத்துறை நடத்த எதிர்பார்ப்பு
மலைக்கிராமங்களில் சிறப்பு மருத்துவ முகாம் சுகாதாரத்துறை நடத்த எதிர்பார்ப்பு
மலைக்கிராமங்களில் சிறப்பு மருத்துவ முகாம் சுகாதாரத்துறை நடத்த எதிர்பார்ப்பு
ADDED : செப் 27, 2024 11:19 PM
உடுமலை: போதிய மருத்துவ வசதி இல்லாத மலைவாழ் கிராமங்களில், குறிப்பிட்ட இடைவெளியில், சுகாதாரத்துறை சார்பில், சிறப்பு முகாம்கள் நடத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.
ஆனைமலை புலிகள் காப்பகம், உடுமலை, அமராவதி வனச்சரகங்களில், 13க்கும் மேற்பட்ட மலைவாழ் கிராமங்கள் உள்ளன.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, தன்னார்வ அமைப்புகள் சார்பில், அக்கிராம மக்களின் உடல் நலம் குறித்த ஆய்வு நடத்தப்பட்டது.
அதில், குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடும், பெண்களுக்கு ரத்தசோகை பாதிப்பும் அதிகரித்து வருவது கண்டறியப்பட்டது. நடைமுறை சிக்கலால், இரும்பு சத்து மாத்திரை வழங்குவது உட்பட திட்டங்கள் அப்பகுதிக்கு முழுமையாக சென்றடைவதில்லை.
மருத்துவ தேவைக்காக, சமவெளிப்பகுதிக்கு வர மிகுந்த சிரமப்படுவதால், அடிப்படை பரிசோதனை செய்வதற்கு கூட அப்பகுதியினர் ஆர்வம் காட்டுவதில்லை.
சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: மலைவாழ் கிராம மக்களுக்கு மத்திய, மாநில அரசுகள் அறிவிக்கும் திட்டங்கள், முறையாக அவர்களுக்கு சென்று சேர்கிறதா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
ஆண்டுதோறும் அவர்களின் உடல்நிலை குறித்த தகவல்களில், பின்னடைவே காணப்படுகிறது. குறுகிய இடைவெளிகளில் மருத்துவ முகாம்கள் நடத்தப்படுவதோடு, அப்பகுதி குழந்தைகளுக்கு தேவையான அளவு சத்து பொருட்கள் மற்றும் மாத்திரைகள் வழங்க அரசு துறைகள் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, தெரிவித்தனர்.
குடிநீரை பரிசோதிக்கணும்!
மலைவாழ் கிராம மக்கள், வனப்பகுதியில் உள்ள சுனைகள் மற்றும் சிற்றாறுகளிலிருந்து கிடைக்கும் தண்ணீரையே சுத்திகரிக்காமல், குடிநீராக பயன்படுத்துகின்றனர்.
தளிஞ்சி, கோடந்துார், ஈசல்திட்டு, குருமலை போன்ற மலைவாழ் கிராமங்களில், கோடைக்காலங்களில், குடிநீர் தட்டுப்பாடும் ஏற்படுகிறது.
இருப்பு வைக்கும் தண்ணீரை, சுத்திகரிக்காமல், குடிநீராகவும், பிற தேவைகளுக்கும் பயன்படுத்துவது அவர்களின் நோய்களுக்கு ஒரு காரணமாக அமைகிறது.
அனைவருக்கும் பாதுகாப்பான குடிநீர் என்ற அடிப்படையில், மலைவாழ் கிராமங்களில், குடிநீர் வடிகால் வாரியம் வாயிலாக ஆய்வு நடத்தி, அவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
இது அவர்களது உடல் நல மேம்பாட்டுக்கு முக்கிய பங்கு வகிப்பதாக இருக்கும். இது குறித்து திருப்பூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க எதிர்பார்ப்பு நிலவுகிறது.