/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'பள்ளிகளில் மாணவர் சேர்க்கை எல்லை வரையறை அவசியம்'
/
'பள்ளிகளில் மாணவர் சேர்க்கை எல்லை வரையறை அவசியம்'
ADDED : ஆக 15, 2025 09:24 PM
திருப்பூர்; ''அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி கிடைக்கும் வகையில், அருகாமை பள்ளித் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்; மாணவர் சேர்க்கைக்கு எல்லை வரையறை நிர்ணயிக்க வேண்டும்'' என, கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு கூறியுள்ளது.
இதன் ஒருங்கிணைப்பாளர் மூர்த்தி அறிக்கை:
பள்ளி அமைந்துள்ள இடம் அருகே வசிக்கும் அனைத்து குழந்தைகளும், அந்தந்த பகுதியில் உள்ள பள்ளிகளில் சேர்க்கப்பட வேண்டும் என்பதை சட்டத்தின் வாயிலாக கட்டாயமாக்க வேண்டும். அருகாமைப்பள்ளி முறையை செயல்படுத்தாமல், அனைவரையும் உள்ளடக்கிய கல்வியை, வெறும் சொற்களால் சாத்தியமாக்க முடியாது.
அரசிடம் நிதியுதவி பெறாத தனியார் பள்ளிகளில், குறைந்தபட்சம், 25 சதவீதம் அளவிற்காவது நலிவுற்ற, கல்வி மறுக்கப்பட்ட ஏழை குழந்தைகளை சேர்க்க வேண்டும் என்று, கல்வி உரிமைச்சட்டம் கூறுகிறது. பள்ளி நிர்வாகங்கள் விரும்பினால், 25 சதவீதத்துக்கு அதிகமாக கூட மாணவர்களை சேர்க்கலாம். அந்த குழந்தைகளுக்கான கல்விக்கட்டணத்தை பள்ளிகளுக்கு வழங்க வேண்டிய பொறுப்பும், கடமையும் மத்திய, மாநில அரசுகளுக்கு உள்ளது. கல்வி உரிமைச் சட்டத்தின் பலன் அனைவருக்கும் கிடைக்கவில்லை என்பது தான் கள நிலவரம்.
அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில், மாணவர் சேர்க்கைக்கு எல்லை வரையறை உருவாக்க வேண்டும். அந்தந்த பகுதியை வசிப்பிடமாக கொண்ட குழந்தைகள், அந்தந்த பகுதியில் உள்ள பள்ளிகளில் தான் சேர்க்கப்பட வேண்டும். மாறாக, ஏழைகளுக்கான பள்ளி, வசதி நிறைந்தவர்களுக்கான பள்ளி என்ற நிலையை மாற்றி, பொதுப்பள்ளி என்ற நிலையை உருவாக்க வேண்டும்.
அதே போன்று, அனைத்து குழந்தைகளுக்கும் அரசுப்பள்ளிகளில் கட்டணமில்லா முன்பருவக்கல்வி வழங்கவும், கல்வி உரிமைச்சட்டம் வலியுறுத்துகிறது. தமிழகத்தில், மாநில கல்வி கொள்கையை உருவாக்க அமைக்கப்பட்ட குழுவின் முழுமையான அறிக்கையை வெளியிட வேண்டும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.