/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குப்பைகள் தரம் பிரித்து வாங்குவது அவசியம்
/
குப்பைகள் தரம் பிரித்து வாங்குவது அவசியம்
UPDATED : டிச 16, 2025 08:24 AM
ADDED : டிச 16, 2025 06:51 AM

திருப்பூர் மாநகராட்சி பகுதியில் கடந்த 2 மாதமாக குப்பைகழிவுகள் அகற்றப்படாமல் தேங்கிக்கிடக்கிறது. மாநகராட்சி பகுதியில் சேகரமாகும் கழிவுகள் அருகேயுள்ள பாறைக்குழிகளில் கொண்டு சென்று கொட்டப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில், பாறைக்குழிகளில் குப்பை கொட்டுவது நிறுத்தப்பட்டது. மேலும், இது குறித்த வழக்கு மற்றும் அதன் மீதான கோர்ட் உத்தரவுகளையடுத்து, இடுவம்பாளையத்தில் குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைத்து செயல்படுத்தும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில், நகராட்சி நிர்வாக கமிஷனர் மதுசூதன் ரெட்டி நேற்று முன்தினம் திருப்பூர் வந்தார். நேற்று காலை 7:00 மணிக்கு முன்னதாகவே, மாநகராட்சி அலுவலகத்தில் அவர் தலைமையில் ஆய்வு கூட்டம் நடந்தது. மேயர் தினேஷ்குமார், துணை மேயர் பாலசுப்ரமணியம், கமிஷனர் அமித் ஆகியோர் முன்னிலையில் இந்த ஆய்வுக் கூட்டம் நடந்தது.
மாநகராட்சி சுகாதார பிரிவு அலுவலர்கள் கலந்து கொண்டனர். இதில், மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை பணி குறித்து அனைத்து நடவடிக்கைகளும் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டது.
அதன்பின், இடுவம்பாளையம் குப்பை தரம் பிரிப்பு மையம் திட்டமிடப்பட்டுள்ள பகுதியை அவர் நேரில் சென்று பார்வையிட்டு, பணிகள் குறித்து கேட்டறிந்தார். மேலும், மாநகராட்சி சார்பில் செயல்பட்டு வரும் குப்பை தரம் பிரிப்பு மையங்கள், நுண் உர உற்பத்தி மையங்கள்; தனியார் நிறுவனங்களில் குப்பை தரம் பிரித்து பெறும் பணி; பல்வேறு இடங்களில் செகண்டரி பாய்ன்ட்டாக தேக்கி வைக்கப்பட்டுள்ள குப்பை கழிவுகள் ஆகியவற்றையும் அவர் பார்வையிட்டார்.
டவுன்ஹால் அரங்கில், மாநகராட்சி சுகாதார பிரிவு அலுவலர்கள்; திடக்கழிவு மேலாண்மை பொறுப்பு அலுவலர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அவர் பேசினார்.
இந்த ஆய்வுக் கூட்டங்களில் தெரிவிக்கப்பட்ட கருத்துகள் விவரம்:
மாநகராட்சி பகுதியில் கழிவுகளை தரம் பிரித்து பெற வேண்டியது மாநகராட்சி நிர்வாகத்தின் பொறுப்பு. அதற்கேற்ப பொதுமக்களை தயார் படுத்தும் வகையில் உரிய விழிப்புணர்வு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து பட்டியல் தயார் செய்ய வேண்டும்.
அதற்கான கருத்துருக்கள் உடனடியாக அரசுக்கு அனுப்பி வைத்து, தேவையான நிதி ஆதாரங்கள் பெற நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்கனவே நிதி ஒதுக்கீடு செய்தும், அறிவிக்கப்பட்டும் உள்ள திட்டங்களை செயல்பாட்டுக்கு கொண்டு வரும் வகையிலும் பணிகள் மேற்கொள்ளப்படும்.
கூடுதலான குப்பை தரம் பிரிக்கும் மையங்கள், மறு சுழற்சி மற்றும் மாற்றுப் பயன்பாடு மையங்கள் தேவை மற்றும் செயல்பாடு குறித்த விவரங்கள் அடிப்படையில் அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
சுகாதார பிரிவினர் தவிர பொறியியல் பிரிவு, நிர்வாக பிரிவு, வருவாய் பிரிவு உள்ளிட்டவற்றிலிருந்தும் வார்டுக்கு ஒரு பொறுப்பாளர் என்ற அடிப்படையில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் நியமிக்க வேண்டும். அவர்கள் தினமும் தங்களுக்கு உரிய பகுதியில் அதற்கான பணிகளை திட்டமிட்டும், மேற்பார்வையிட்டும் நடைமுறைப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.

