/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பல்வேறு துறைகள் இணைந்தால் மட்டுமே சாத்தியம்
/
பல்வேறு துறைகள் இணைந்தால் மட்டுமே சாத்தியம்
ADDED : மார் 15, 2024 12:44 AM
திருப்பூர்;திருப்பூரில், சுற்றுலா சார்ந்த கட்டமைப்புகளை மேம்படுத்த பல்வேறு துறைகள் ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது.
பனியன் உற்பத்தி நகரம் என்பதை கடந்து, திருப்பூரில் பொழுதுபோக்கிற்கான போக்கிடம் எதுவும் இல்லை என்ற எண்ணம், பரவலாக இருக்கிறது.
மலைகள், அணைகள், நீர்வீழ்ச்சி என இயற்கை எழில் கொஞ்சும் திருமூர்த்தி மலை, அமராவதி அணை, பஞ்சலிங்க அருவி, சின்னாறு, அமராவதி முதலை பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் இம்மாவட்டத்தில் தான் உள்ளன.
இவற்றை தவிர, 10 ஆன்மிக சுற்றுலா தலங்கள், பெரிதாக அடையாளப்படுத்தப்படாமலேயே, மாநில சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் வரைபடத்தில் இடம் பிடித்திருக்கிறது.
அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில், திருமுருகன்பூண்டியில் திருமுருகநாதர் சுவாமி கோவில், உடுமலையில் அமணலிங்கேஸ்வரர் மற்றும் திருப்பதி கோவில்கள், மானுபட்டியில் ஏழுமலையான் கோவில்.
கூடுதல் வருவாய்
காங்கயம் சிவன்மலை கோவில், திருப்பூரில் சுக்ரீஸ்வரர் கோவில், சாமாளாபுரத்தில் வாழைத் தோட்டத்து அம்மன் கோவில், தாராபுரத்தில் அனுமந்தராயர் சுவாமி கோவில் என, பழம் பெருமை வாய்ந்த, தேவாரம் உள்ளிட்ட சங்க இலக்கியங்களில் பாடல் பெற்ற கோவில்கள் நிறைந்த ஆன்மிக பூமியாகவும், திருப்பூர் விளங்கி கொண்டிருக்கிறது.
ஆண்டுதோறும், லட்சக்கணக்கானோர் இங்கு, வந்து செல்கின்றனர் என்ற புள்ளிவிபரமும் உள்ளது.
இந்த இடங்களையெல்லாம் சுற்றுலா தலமாக மாற்றி, பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் வருகையை அதிகரிக்க செய்யவும், அதன் மூலம் கூடுதல் வருவாய் பெறும் வகையிலும் திட்டமிடப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.
ஆனால், இங்குள்ள சுற்றுலா தலங்களை பொறுத்தவரை ஹிந்து சமய அறநிலையத்துறை, அந்தந்த உள்ளாட்சி நிர்வாகங்கள், வனத்துறை, ஊரக வளர்ச்சி முகமை, பொதுப்பணித்துறை என, பல்வேறு துறையினரின் கண்காணிப்பு, கட்டுப்பாட்டின் கீழ் அந்த இடங்கள் உள்ளன.
இதனால், சுற்றுலா துறையால் மட்டும், தனித்து, சுற்றுலா சார்ந்த வளர்ச்சிப்பணிகளை செய்வது கடினம்; அந்தந்த துறையினர் அதற்கான தடையின்மை சான்றை வழங்கினால் மட்டுமே, இது சாத்தியமாகும். 'இதற்கான ஏற்பாடுகளை அரசு எடுக்க வேண்டும்' என்பது, சுற்றுலா ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு.

