/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'பி.ஏ.பி.,க்கு நிலம் கொடுத்து 43 வருஷமாச்சு... இழப்பீடு தொகை இன்னும் கெடைக்கலீங்க!' நிலம் கொடுத்த விவசாயிகள் ஆதங்கம்
/
'பி.ஏ.பி.,க்கு நிலம் கொடுத்து 43 வருஷமாச்சு... இழப்பீடு தொகை இன்னும் கெடைக்கலீங்க!' நிலம் கொடுத்த விவசாயிகள் ஆதங்கம்
'பி.ஏ.பி.,க்கு நிலம் கொடுத்து 43 வருஷமாச்சு... இழப்பீடு தொகை இன்னும் கெடைக்கலீங்க!' நிலம் கொடுத்த விவசாயிகள் ஆதங்கம்
'பி.ஏ.பி.,க்கு நிலம் கொடுத்து 43 வருஷமாச்சு... இழப்பீடு தொகை இன்னும் கெடைக்கலீங்க!' நிலம் கொடுத்த விவசாயிகள் ஆதங்கம்
ADDED : பிப் 01, 2025 12:27 AM

திருப்பூர்; பி.ஏ.பி., விரிவாக்க திட்டத்துக்காக நிலம் கையகப்படுத்தி 43 ஆண்டுகளாகியும் இழப்பீடு தொகை வழங்காததால், திருப்பூர் மாவட்ட விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
பி.ஏ.பி., திட்டத்தின் பல்லடம் விரிவாக்க பகுதிகளில், கடந்த 1980 - 81ல், வாய்க்கால் வெட்டப்பட்டது. பல்லடம், வேலம்பாளையம், சாமளாபுரம், பூமலுார், பள்ளபாளையம், ஆண்டிபாளையம், வீரபாண்டி, இடுவாய், மங்கலம் கிராமங்களில் விவசாயிகளிடமிருந்து நிலம் கையகப்படுத்தப்பட்டு, வாய்க்கால் உருவாக்கப்பட்டது. அதற்காக நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு, அரசு இன்னும் இழப்பீட்டு தொகை வழங்கவில்லை.
இது குறித்து, நேற்று நடந்த விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்தில், மங்கலம் கிராம நீரினை பயன்படுத்தும் பாசன விவசாயிகள் நலச்சங்க தலைவர் பொன்னுசாமி அளித்த மனு:
பி.ஏ.பி., திட்டம் விரிவாக்கத்துக்காக திருப்பூர் மாவட்டத்தில், குறு, சிறு விவசாயிகள் ஏராளமானோர் நிலம் வழங்கியுள்ளனர்.
அதில், பொதுப் பணித்துறையினர் வாய்க்கால் வெட்டினர். நிலம் வழங்கி, 23 ஆண்டுகளாகியும், ஆண்டிபாளையம், மங்கலம் உள்பட பல்வேறுபகுதி விவசாயிகளுக்கு அரசு இன்னும் இழப்பீடு வழங்கவில்லை.
இழப்பீடு கேட்டு, கடந்த, 40 ஆண்டுகளாக அரசு அதிகாரிகளையும், பொதுப் பணித்துறை அதிகாரிகளையும் அணுகிவருகிறோம்; ஆனால், எந்த பயனுமில்லை. விவசாய நிலங்களின் குறுக்கே வாய்க்கால் வெட்டப்பட்டதால், கடந்த 1980 - 81ல், நிலத்தின் மதிப்பு குறைக்கப்பட்டது. ஆனால், தற்போது அந்நிலங்களின் மதிப்பு பலமடங்கு உயர்ந்துள்ளது. ஒரு ஏக்கர், 3 கோடி ரூபாய்க்கு மேல் விற்பனையாகிறது.
பி.ஏ.பி.,க்காக வழங்கப்பட்ட நிலத்துக்கு இழப்பீடு வழங்காததால், ஏராளமான விவசாயிகள் நஷ்டமடைந்துள்ளனர். புதிய நிலம் எடுப்பு சட்டம், 30/2013-ன்படி கணக்கிட்டு, வட்டியுடனும், நுாறு சதவீத கூடுதல் ஆறுதல் தொகையுடன் சேர்த்து வழங்கவேண்டும்.
நிலம் கையகப்படுத்தப்பட்ட ஐந்து ஆண்டுகளுக்குள் இழப்பீடு தொகை வழங்கப்படாதபட்சத்தில், நிலத்தை உரிமையாளருக்கே திரும்ப ஒப்படைக்கவேண்டும் என்கிற உச்சநீதிமன்ற தீர்ப்பு ஒன்று உள்ளதை கவனத்தில் கொள்ளவேண்டும்.
எனவே, பி.ஏ.பி., வாய்க்காலுக்கு நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு, காலத்தை மேலும் இழுத்தடிக்காமல், உடனடியாக இழப்பீடு தொகை வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.