/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அலகுமலை ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள் விறுவிறுப்பு
/
அலகுமலை ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள் விறுவிறுப்பு
ADDED : பிப் 07, 2025 10:26 PM

பொங்கலுார்; அலகுமலை ஜல்லிக்கட்டு காளைகள் நலச்சங்கம் சார்பில், அலகுமலையில் ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுகிறது.
இந்த ஆண்டு தைப்பூச திருவிழாவை முன்னிட்டு, வரும், 16ம் தேதி காலை, 7:00 மணிக்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் ஜல்லிக்கட்டு காளைகள் நலச்சங்கம் இணைந்து ஜல்லிக்கட்டு போட்டியை நடத்து கின்றன. இந்த ஆண்டு கடந்த முறை நடந்த இடத்திற்கு எதிர்ப்புறம் போட்டி நடைபெற உள்ளது.
ஜல்லிக்கட்டு நடைபெறும் இடம் சுத்தம் செய்யப்பட்டு சமன்படுத்தப்பட்டுள்ளது. கடந்த வாரம், கேலரி அமைப்பதற்கான கால்கோள் விழா நடந்தது. தற்போது, காளைகள் கட்டுவதற்கான இடம், தண்ணீர் வசதி, காளைகள் பிடிபடும் பகுதி, பார்வையாளர்கள் ஜல்லிக்கட்டு போட்டியை அமர்ந்து பார்ப்பதற்கு வசதியாக கேலரி அமைக்கும் பணி ஆகியவை விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
விழா ஏற்பாடுகளை அலகுமலை ஜல்லிக்கட்டு காளைகள் நலச்சங்க இளைஞரணி தலைவர் கவுரிசங்கர் தலைமையிலான குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
ஜல்லிக்கட்டு விளையாட்டில் கலந்து கொள்ளும் காளைகளுக்கான போட்டி கடுமையாக உள்ளது. பலரும் காளைகளுக்கான 'டோக்கன்' பெற முட்டி மோதி வருகின்றனர். பல முனைகளில் இருந்தும் போட்டி ஏற்பாட்டாளர்களை பலரும் நச்சரிக்க துவங்கி உள்ளனர்.