/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஜமாபந்தி துவங்கியது! 350 வருவாய் கிராமத்தின் வரவு - செலவு சரிபார்ப்பு
/
ஜமாபந்தி துவங்கியது! 350 வருவாய் கிராமத்தின் வரவு - செலவு சரிபார்ப்பு
ஜமாபந்தி துவங்கியது! 350 வருவாய் கிராமத்தின் வரவு - செலவு சரிபார்ப்பு
ஜமாபந்தி துவங்கியது! 350 வருவாய் கிராமத்தின் வரவு - செலவு சரிபார்ப்பு
ADDED : மே 20, 2025 11:17 PM

திருப்பூர், ; வருவாய்த்துறை கணக்குகளை தணிக்கை செய்யும் ஜமாபந்தியில், பொதுமக்கள் பங்கேற்று, நீண்டநாட்களாக தீர்க்கப்படாத பிரச்னைகளை, ஜமாபந்தி அலுவலரிடம் மனுவாக அளித்து வருகின்றனர். மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுத்து, ஜமாபந்தி மீதான மக்களின் நம்பிக்கையை உறுதி செய்ய வேண்டியது அதிகாரிகளின் கடமை.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள ஒன்பது தாலுகாக்களிலும், ஜமாபந்தி, நேற்று துவங்கியது. அந்தந்த தாலுகாவுக்கு நியமிக்கப்பட்டுள்ள அலுவலர்கள், ஜமாபந்தியை நடத்தி வருகின்றனர்.
அவ்வகையில், மொத்தம், 350 கிராமங்களுக்கான வருவாய்த்துறை சார்ந்த கணக்குகள், ஜமாபந்தி அலுவலர்களால் சரிபார்க்கப்பட்டு, ஒப்புதல் அளிக்கப்படுகிறது. பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டு, தீர்வு காணப்படுகிறது.
l திருப்பூர் வடக்கு தாலுகா அலுவலகத்தில், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் பக்தவச்சலம் தலைமையில் ஜமாபந்தி துவங்கியது. நேற்று நெருப்பெரிச்சல், மண்ணரை, தொட்டிபாளையம் கிராமங்களுக்கான ஜமாபந்தி நடைபெற்றது.
l ஊத்துக்குளி தாலுகாவில், மாவட்ட வழங்கல் அலுவலர் ரவிச்சந்திரன் தலைமையில், குன்னத்துார் பிர்காவுக்கு உட்பட்ட 27 கிராமங்களுக்கு நடைபெற்றது
l பல்லடம் தாலுகா அலுவலகத்தில், கலால் உதவி கமிஷனர் செல்வி தலைமையில் ஜமாபந்தி நடைபெற்றது. நேற்று, பல்லடம் பிர்காவுக்கு உட்பட்ட ஏழு கிராமங்களுக்கு நடைபெற்றது.
l அவிநாசி தாலுகா அலுவலகத்தில், திருப்பூர் வருவாய் கோட்டாட்சியர் மோகனசுந்தரம் தலைமையில் ஜமாபந்தி துவங்கியுள்ளது. நேற்று, சேவூர் பிர்காவுக்கு உட்பட்ட 14 கிராமங்களின் வருவாய் கணக்குகள் தணிக்கை செய்யப்பட்டன.
l தாராபுரத்தில், கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் ஜமாபந்தி நடைபெற்றது. தாராபுரம் பீர்காவுக்கு உட்பட்ட ஒன்பது கிராமங்களுக்கான ஜமாபந்தி நேற்று நடைபெற்றது;
l திருப்பூர் தெற்கு தாலுகா அலுவலகத்துக்கு, டி.ஆர்.ஓ., கார்த்திகேயன் ஜமாபந்தி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். மங்கலம், ஆண்டிபாளையம், திருப்பூர், வீரபாண்டி, இடுவாய் கிராமங்களுக்கான ஜமாபந்தி நேற்று நடைபெற்றது.
நாளைய ஜமாபந்தி
ஊத்துக்குளி பிர்கா - 22 கிராமங்கள், கரடிவாவி பிர்கா - 7 கிராமங்கள், அவிநாசி மேற்கு பிர்கா - 10 கிராமங்கள், அலங்கியம் பிர்கா - 9 கிராமங்கள், வேலம்பாளையம், கணக்கம்பாளையம், பொங்குபாளையம்,செட்டிபாளையம் கிராமங்கள், நல்லுார், முதலிபாளையம், முத்தணம்பாளையம் கிராமங்கள்.
வழக்கமான சம்பிரதாயம்
ஜமாபந்தியில், நில அளவைக்கு பயன்படுத்தப்படும் கோணக்கட்டை, சங்கிலிகள் கொண்டு வரப்பட்டு, சரியான அளவில் உள்ளனவா என, ஜமாபந்தி அலுவலரால் சரிபார்க்கப்பட்டது. வருவாய் கிராமங்களில் பராமரிக்கப்படும் அனைத்து பதிவேடுகளும், தாலுகா அலுவலகங்களுக்கு கொண்டுவரப்பட்டன. கிராம நிர்வாக அலுவலர், தாசில்தார் பரிந்துரையின்படி, தணிக்கை செய்து, ஜமாபந்தி அலுவலர் ஒப்புதல் அளித்தார்.
பட்டா மாறுதல், இலவச வீட்டுமனை பட்டா, இருப்பிடச்சான்று, நில அளவை, பிறப்பு - இறப்பு சான்று, மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு, சாலை வசதி, ரேஷன் கார்டு, மகளிர் உரிமைத்தொகை உள்பட பல்வேறுகோரிக்கைகளை வலியுறுத்தி, ஜமாபந்தி அலுவலரிடம் மனு அளித்தனர்.