ADDED : அக் 18, 2025 11:25 PM

திருப்பூர்: தீபாவளியையொட்டி திருப்பூரில் பூக்கள் விலை கிடுகிடுவென உயர்ந்தது. மல்லிகை கிலோ 1500 ரூபாய்க்கு விற்றது.
திருப்பூர் பூ மார்க்கெட்டுக்கு சத்தியமங்கலம், நத்தம், திண்டுக்கல், ஓசூர், சேலம் உள்ளிட்ட பகுதியில் இருந்து பூக்கள் விற்பனைக்கு வருகிறது. இன்றும், நாளையும் திருமணங்கள், நாளை தீபாவளி பண்டிகை என்பதால், பூக்களை வாங்க மக்கள் அதிகளவில் வருவர் என்பதை எதிர்பார்த்து பூக்களை மொத்தமாக வாங்கி செல்ல சில்லறை வியாபாரிகள் அதிகளவில் நேற்று மார்க்கெட் வந்திருந்தனர்.
தீபாவளி ஷாப்பிங்க்கு வந்த பெண்கள் பலர் பூ மார்க்கெட்டுக்குள் நுழைய, ஏற்கனவே இருந்த கூட்டத்துடன் இவர்களும் சேர்ந்ததால், பலரும் திக்குமுக்காடினர். எங்கும் விலகி நிற்கக் கூட இடமில்லை; கூட்டம் கூடியதால், விலையும் கூடியது. நேற்று மல்லிகை கிலோ - 1,400 ரூபாய், முல்லை - 1000 ரூபாய், காக்கடா - 400 ரூபாய், அரளி - 200 ரூபாய், செவ்வந்தி - 300 ரூபாய்க்கு விற்றது. ரோஜா பூ ஒன்று முதல் தரம், 20, இரண்டாம் தரம், 15 ரூபாய்க்கு விற்றது.
சிலர் விலையை பார்த்து ஒதுங்கினாலும், பெரும்பாலானோர் பூக்களை வாங்கிச் சென்றனர். இதனால், பூ மார்க்கெட் கூட்டம் மாலை வரை குறையவில்லை.