ADDED : அக் 18, 2025 11:25 PM
கொடுங்கோல் தன்மை, பழி வாங்கும் உணர்ச்சி, வன்முறை எண்ணங்கள் கொண்டவர்களை அசுரன் என்கிறோம். நரக +அசுரன் = நரகாசுரன். எந்த யுகத்திலோ மடிந்து போன நரகாசுரனை இன்னும் ஏன் நினைவில் வைத்துக் கொண்டாட வேண்டும் என்ற கேள்வி, குழந்தைகள் மனதில் கூட எழும்; அதற்கான விடை: நரகமாகிய அமங்கல அசுரனை மாய்த்து சொர்க்கமான தெய்வத்தன்மையைப் பெறும் நோக்கில் கொண்டாடப்படுவதுதான் தீபாவளி என்பதுதான்.
பூமியில் இரண்டு தன்மைகள் உண்டு; தெய்வத்தன்மை மிக்க சுபிட்சம் உள்ள பகுதிகளை சொர்க்கம் என்றும்; அசுரத்தன்மையான அமங்கலம் உள்ள பகுதியை நரகம் என்றும் சொல்லலாம். ஒவ்வொருவர் மனதிலும் இரண்டு தன்மைகளும் உண்டு. வாழ்வின் நோக்கம் தெய்வத்தன்மையைப் பெறுவதுதான். அதாவது மங்களத்தைப் பெறுவதுதான். மங்களத்தைப் பெற அமங்கலங்கள் போக வேண்டும். பொறுமை, அடக்கம், திறமையுடன் செல்வமும், அறிவும் பெற்றவர்களாகவும் திகழ்ந்தால், வாழ்க்கை சிறப்புறும்.
தீமையைப் போக்கும் தீபாவளித் திருநாளை மகிழ்ச்சியோடு கொண்டாடுவோம். நன்மையை வளர்ப்போம்.