/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாநகரம் முழுக்க ஸ்தம்பித்த போக்குவரத்து
/
மாநகரம் முழுக்க ஸ்தம்பித்த போக்குவரத்து
ADDED : அக் 18, 2025 11:24 PM

திருப்பூர்: தீபாவளி 'ஷாப்பிங்' செய்வதற்காக படையெடுத்த மக்களால், திருப்பூர் மாநகரம் போக்குவரத்து நெரிசலால் ஸ்தம்பித்தது. தடை விதிக்கப்பட்டபோதும், கனரக வாகனங்கள் மாநகரில் நுழைந்ததால், நெரிசலைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. திருப்பூரில் உள்ள பின்னலாடை மற்றும் சார் நிறுவனங்களில் போனஸ் பட்டுவாடா முடிந்தது. நேற்று மாநகரில் ஜவுளி, பட்டாசு வாங்க நகரின் நான்கு திசைகளில் இருந்தும் மக்கள் படையெடுத்தனர்.
ஊர்ந்துசென்ற வாகனங்கள் அவிநாசி ரோடு, காந்தி நகர் சிக்னல் துவங்கி, குமார் நகர் வரை வாகனங்கள் வரிசை கட்டி நின்றன. பங்களா ஸ்டாப் துவங்கி, 60 அடி ரோடு, புஷ்பா தியேட்டர் சந்திப்பு, ரயில்வே ஸ்டேஷன் ரவுண்டானா வரை மெதுவாக வாகனங்கள் ஊர்ந்து சென்றன. மேம்பாலம் முழுதும் பாதசாரிகள் நடந்து செல்ல கூட வழியில்லாமல், வாகன பெருக்கம் நிறைந்திருந்தது.திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்ட் முன்புறம் துவங்கிய நெரிசல், மாநகராட்சி சந்திப்பு, முனிசிபல் ஆபீஸ் வீதி, பார்க் ரோடு, நேரு வீதி, ரயில்வே ஸ்டேஷன் முன்புறம் வரை தொடர்ந்தது. எம்.ஜி.ஆர்., சிலை சிக்னல் சந்திப்பு, மாநகராட்சி சிக்னல், மத்திய பஸ் ஸ்டாண்ட் முன்புறம் போலீசார் வாகனங்களை ஒழுங்குபடுத்தி அனுப்புவதற்கு பெரும் சிரத்தை எடுக்க வேண்டியிருந்தது.
எம்.ஜி.ஆர். சிலை சிக்னலை வாகனங்கள் கடந்து செல்ல வழியின்றி, ஸ்ரீ சக்தி தியேட்டர் ரவுண்டானா வரை தேங்கியதால், திருச்சி, தஞ்சாவூர் பஸ்கள், வாலிபாளையம் சந்திப்பு, யூனியன் மில் ரோடு வழியாக முன்னேறின. குறுக்கு வீதியில் புகுந்த பெரிய பஸ்களால், பிற வாகனங்கள் முன்னேறி செல்ல முடியவில்லை. ஊத்துக்குளி ரோட்டில் சபாபதிபுரம் துவங்கி, ரயில்வே கேட் வரை நெரிசல் ஏற்பட்டதால், சேலம், திருவண்ணாமலை பஸ்கள் கே.பி.என்., காலனி, அணைக்காடு வழியாக புகுந்து பஸ் ஸ்டாண்ட் வர முயன்றன; அங்கும் நெரிசல் ஏற்பட்டது.
காலை முதல் மாலை வரைகே.எஸ்.சி. ஸ்கூல் வீதி, பழைய மார்க்கெட் வீதி, ஈஸ்வரன் கோவில் வீதி வழக்கமாகவே கூட்டமாக இருக்கும். நேற்று அதிக வாகனங்கள். விதிமீறி முன்னேறிய லாரி ஒன்றால், போக்குவரத்து நெரிசல் சீராக, 25 நிமிடத்துக்கும் மேலானது. பல்லடம் ரோட்டில் தென்னம்பாளையம் துவங்கி வித்யாலயம் வரை, தாராபுரம் ரோட்டில் உஷா தியேட்டர் ஸ்டாப் சிக்னல், சந்திப்பு, காங்கயம் ரோட்டில் சி.டி.சி., கார்டன், புதுார் பிரிவில் காலை 10:00 முதல் மாலை, 3:00 மணி வரை வாகன நெரிசலால், மாநகரை விட்டு வெளியேறும் டவுன் பஸ்களுக்கு, பெரும் சிரமம் ஏற்பட்டது.
நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க, பஸ்கள் உள்ளிட்ட கனரக வாகனங்களுக்கு மாற்று வழியை போலீசார் அறிவித்தனர். நேற்று மாநகருக்குள் முக்கிய சந்திப்புகளில் போக்குவரத்து நெரிசலை சீர்செய்த போலீசார், புறநகர் வழியாக மாநகரில் கனரக வாகனங்கள் நுழைவதை தடுக்கவில்லை.
விளைவு, முக்கிய சந்திப்புகளை கடந்து செல்ல கனரக வாகனங்கள் எடுத்துக் கொண்ட நேரம், அடுத்தடுத்து பின் தொடர்ந்து வந்த கார், வேன், ஆட்டோக்களால் நெரிசல் கட்டுக்குள் வராமல் போனது. புது மார்க்கெட் வீதியில் டூவீலர் சென்று வர விதிக்கப்பட்ட தடையால் குப்பண்ணா செட்டியார் வீதி, குள்ளிச்செட்டியார் வீதியில் டூவீலர்கள் ஊர்வலம் போல் வரிசையாக தேங்கி நின்றன. விபரம் அறிந்து போலீசார் வந்து சீர்செய்து, அனுப்பி வைத்தனர்.