/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தொழில்கள் பாதிக்கும் வேலைகள் பறிபோகும்
/
தொழில்கள் பாதிக்கும் வேலைகள் பறிபோகும்
ADDED : டிச 23, 2024 11:39 PM
திருப்பூர் அனைத்து வணிகர் சங்கங்கள் பேரவை தலைவர் துரைசாமி, முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு:
தமிழக அரசு, கடந்த, 10 ஆண்டுகளாக சொத்துவரியை உயர்த்தவில்லை. கடந்த, 2022ம் ஆண்டு சொத்துவரியை உயர்த்த உத்தரவிட்டது. திருப்பூர் மாநகராட்சி, 100 சதவீதம் அளவுக்கு வரியை உயர்த்தியுள்ளது. பத்து ஆண்டுகளுக்கு முன் கட்டியிருந்த வீடுகளுக்கு, 100 சதவீத வரி உயர்வு என்பது சரி; ஆனால், 2020ம் ஆண்டுக்கு பிறகு கட்டிய புதிய வீடுகளுக்கும், 100 சதவீத வரி உயர்வு செய்வது ஏற்புடையதல்ல. அதிகப்படியான வரியால் மக்கள் அதிகம்பாதிக்கப்படுகின்றனர்.
ஏற்கனவே சொத்து வரி உயர்த்தப்பட்ட நிலையில், ஒவ்வொரு ஆண்டும், 6 சதவீதம் வரி உயர்த்தப்படுகிறது. கோவை மாநகராட்சியை காட்டிலும், திருப்பூர் மாநகராட்சியில் வரி அதிகம் உயர்த்தப்பட்டுள்ளது. குறிப்பாக, ஒரே வீதியில் உள்ள கடைகளுக்கு மாறுபட்ட வகையில் வரி விதிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு, வரி உயர்வை பரிசீலித்து, வரியை குறைக்க ஆவன செய்ய வேண்டும்.
மின் கட்டண உயர்வு, மாநகராட்சி வரி உயர்வு காரணமாக, தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மக்கள் வேலைவாய்ப்பை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மத்திய பஸ் ஸ்டாண்ட் எதிரில், தினசரி மார்க்கெட் கட்டடம் கட்டி ஆறு மாதங்களாகிறது. தினசரி மார்க்கெட் கடைகளுக்கு, தனித்தனி வாடகை நிர்ணயம் செய்து கொடுக்க வேண்டும். மாறாக, ஏலத்தில் விட்டால், ஏலம் எடுப்பவர்கள் உள்வாடகைக்கு விடுவர். இதனால்,மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படும்.