/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி...
/
சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி...
ADDED : ஜன 16, 2024 02:28 AM
'டிரைவர்கள் பொறுப்புள்ளவராக இருங்கள். கோபப்படாதீர்கள். குடிபோதையில் வாகனம் இயக்காதீர். சாலை அனைவருக்கும் பொதுவானது. தேவையான அளவு சாலையை பயன்படுத்தி விட்டு, விட்டுக் கொடுக்கும் பழக்கம் வளர வேண்டும்,' என, தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் ஆனந்த் அறிவுரை வழங்கினார்.
போக்குவரத்துத்துறை சார்பில், ஜன., 15 முதல், பிப்., 14 வரை ஒரு மாதம் சாலை பாதுகாப்பு வாரம் கடைபிடிக்க, விழிப்புணர்வு ஏற்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக நேற்று காலை தெற்கு ஆர்.டி.ஓ., ஆனந்த், ஆய்வாளர்கள் பாஸ்கர், ஈஸ்வரன், செந்தில்ராம், நிர்மலா ஆகியோர் மத்திய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கினர்.
அதில், 'பாதசாரிகள் சாலையை கடக்கும் இடத்தில், வாகன இயக்கத்தை நிறுத்தி, பாதசாரிகளுக்கு வழிவிடவும்; சாலையில் பாதசாரிகளுக்கே முதலிடம். சாலைக் குறியீடுகளையும், விதிகளையும் மதித்து நடந்தால், அது விபத்துகளைத் தடுத்திடும். வீடு, பள்ளிகள் உள்ள பகுதியில் வேகத்தை குறைத்து, 20 முதல், 30 கி.மீ., வேகத்தில் பாதுகாப்புடன் வாகனத்தை இயக்க வேண்டும்.
ஹெல்மெட், சீட் பெல்ட் அணிந்து பயணிப்பதால், விபத்தின் போது, 60 சதவீத உயிரிழப்பை தடுக்க முடியும். மொபைல் போன் பேசியபடி ஓட்டுவது, கவனக்குறைவாக வாகனம் இயக்குவது விபத்துக்கு அச்சாரமாகும்,' என்பது உட்பட பல விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
முன்னதாக, ஆர்.டி.ஓ., ஆனந்த் பேசுகையில், ''டிரைவர்கள் பொறுப்புள்ளவராய் இருங்கள்; குடிபோதையில் வாகனம் இயக்காதீர். சாலை அனைவருக்கும் பொதுவானது. தேவையான அளவு சாலையை பயன்படுத்தி விட்டு, விட்டுக் கொடுக்கும் பழக்கம் வளர வேண்டும்,''
என்றார்.