/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பின்னலாடை ஏற்றுமதி உயர்வு அமெரிக்காவில் ஆடை கூடுதல் இருப்பு வைப்பு
/
பின்னலாடை ஏற்றுமதி உயர்வு அமெரிக்காவில் ஆடை கூடுதல் இருப்பு வைப்பு
பின்னலாடை ஏற்றுமதி உயர்வு அமெரிக்காவில் ஆடை கூடுதல் இருப்பு வைப்பு
பின்னலாடை ஏற்றுமதி உயர்வு அமெரிக்காவில் ஆடை கூடுதல் இருப்பு வைப்பு
ADDED : மார் 29, 2025 05:49 AM
திருப்பூர் : அமெரிக்கா, இறக்குமதி வரி விதித்துள்ளதால், ஆடைகள் விலை உயரும் என்று கருதி, அந்நாட்டு வர்த்தகர்கள், கூடுதலாக இறக்குமதி செய்து, ஆயத்த ஆடை இருப்பு வைக்க துவங்கியுள்ளனர்.
அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற டிரம்ப், பல்வேறு நாடுகளுக்கும் இறக்குமதி வரியை உயர்த்தியுள்ளார்; புதிய வரி விதிப்பும் நடந்துள்ளது. இதன்காரணமாக, இறக்குமதியாகும் பொருட்களுக்கான விலை உயர வாய்ப்புள்ளதால், வர்த்தகர்கள் முன்கூட்டியே தயாராகிவிட்டனர்.
உலகம் முழுவதும் வர்த்தகம் செய்யும், அமெரிக்காவின் முன்னணி வர்த்தக நிறுவனங்கள், இந்தியா உட்பட, முன்னணி நாடுகளில் இருந்து, ஆயத்த ஆடை இறக்குமதி செய்கின்றன. புதியவரி விதிப்பால், ஆடைகள் விலை உயரும் என்பதால், வழக்கத்தைவிட கூடுதலான ஆயத்த ஆடை இறக்குமதி செய்து, இருப்பு வைக்க துவங்கியுள்ளனர்.
இதனால், அமெரிக்காவுக்கான ஏற்றுமதி வர்த்தகம், கடந்த சில மாதங்களாக அதிகரித்துள்ளது. கடந்த 2023-24ம் ஆண்டின், ஏப்., முதல் ஜன., வரையில், 31 ஆயிரத்து, 804 கோடி ரூபாயாக இருந்த, அமெரிக்காவுக்கான ஆயத்த ஆடை ஏற்றுமதி, நடப்பு நிதியாண்டின், முதல் 10 மாதங்களில், 36 ஆயிரத்து, 630 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது, 13.8 சதவீதம் அதிகம்.
இந்தியாவின், 'டாப்10' நாடுகளுக்கான ஏற்றுமதியும், நடப்பு நிதியாண்டின், ஏப்., முதல் ஜன., வரையிலான, 10 மாதங்களில், 11.6 சதவீதம் அதிகரித்துள்ளது; அதாவது, 1.09 லட்சம் கோடி ரூபாயை கடந்துவிட்டது.
அமெரிக்காவின் அடுத்தடுத்த வரிவிதிப்புகளால், ஒவ்வொரு பொருட்களின் விலையும் உயரும் அபாயம் உள்ளது. இதன் காரணமாக, அமெரிக்கா மட்டுமல்லாது, வளர்ந்த நாடுகளை சேர்ந்த அனைத்து வர்த்தக நிறுவனங்களும், கூடுதல் ஆடைகளை வாங்கி இருப்பு வைக்க துவங்கிவிட்டன.
கொரோனாவுக்கு பின், பொருளாதார மந்தநிலை நிலவியதால், கூடுதல் இருப்பு வைத்து விற்கும் நிலை மாறியது; சில்லரை வர்த்தகத்துக்கு ஏற்ப, குறைவாக ஆடைகளை இறக்குமதி செய்த வந்தனர். அந்நிலையில் முற்றிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதாவது, அமெரிக்க அதிபர், ஏப்., 2ம் தேதி முதல் பல்வேறு நாடுகளுக்கான வரிவிதிப்பு உயரும் என்று தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, இந்தியாவின் ஜவுளி இறக்குமதிக்கான வரியும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால், பரஸ்பரம் வர்த்தக பாதிப்பை தவிர்க்கவும், முன்கூட்டியே தயாராகவும், இந்தியாவில் இருந்து கூடுதல் ஆர்டர்களை இறக்குமதி செய்து, ஒவ்வொரு நிறுவனமும், கணிசமான ஆடைகளை இருப்பு வைக்க துவங்கியுள்ளன. இதன்காரணமாக, கடந்த சில மாதங்களாக, ஆயத்த ஆடை ஏற்றுமதி அளவுக்கு அதிகமாக நடந்துள்ளது.