/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தினமும் 10 மணி நேரம் பணி நேரமாக வேண்டும்; பின்னலாடை தொழில்துறையினர் எதிர்பார்ப்பு
/
தினமும் 10 மணி நேரம் பணி நேரமாக வேண்டும்; பின்னலாடை தொழில்துறையினர் எதிர்பார்ப்பு
தினமும் 10 மணி நேரம் பணி நேரமாக வேண்டும்; பின்னலாடை தொழில்துறையினர் எதிர்பார்ப்பு
தினமும் 10 மணி நேரம் பணி நேரமாக வேண்டும்; பின்னலாடை தொழில்துறையினர் எதிர்பார்ப்பு
ADDED : ஜூன் 24, 2025 12:55 AM

திருப்பூர்; ''கர்நாடகாவை பின்பற்றி, தொழிலாளரின் தினசரி பணி நேர வரம்பை உயர்த்தினால், ஒட்டுமொத்த திருப்பூரும் பயன்பெறும்'' என, பின்னலாடை தொழில்துறையினர் எதிர்பார்க்கின்றனர்.
கர்நாடகாவில் தினசரி  வேலை நேரம் 10 மணி நேரம்; கூடுதல் வேலை நேரம் சேர்த்து அதிகபட்சம் 12 மணி நேரம் என நிர்ணயிக்க கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. திருப்பூர் பின்னலாடை தொழில்களிலும், சட்ட ரீதியான பணி நேர மாற்றம் அவசியம் என்கின்றனர் தொழில்துறையினர்.
பின்னலாடை தொழிற்சாலைகளில், ஒரு 'ஷிப்ட்' என்பது எட்டு மணி நேரமாக உள்ளது; அதிகபட்சமாக, இரண்டு மணி நேரம் வரை, கூடுதல் நேரம் வேலை செய்கின்றனர்.
கடந்த, 1990 முதல் 2000 வரையிலான காலங்களில், பின்னலாடை அவசர ஏற்றுமதி ஆர்டர்களை அனுப்புவதற்காக, 'விடி-நைட்' என்ற பெயரில், பகல் மற்றும் இரவு என, தொழிலாளர்கள் தொடர்ந்து பணியாற்றியது உண்டு.
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியன் கூறுகையில்,''கர்நாடகாவை போல், தமிழகத்திலும், பணி நேர வரம்பை உயர்த்த வேண்டும். இதன் மூலம், ஆண் மற்றும் பெண் தொழிலாளர் கூடுதலாக பணியாற்றி, கூடுதல் வருவாய் ஈட்ட வாய்ப்பாக இருக்கும். ஏற்றுமதி ஆர்டர்களை குறித்த நேரத்தில் முடித்து அனுப்பவும் வசதியாக இருக்கும். தொழிலாளர் நல சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு இத்தகைய மாற்றத்தை செய்தால், ஒட்டுமொத்த திருப்பூரும் பயன்பெறும்,'' என்றார்.
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்க (டீமா) தலைவர் முத்துரத்தினம் கூறுகையில்,''தொழிலாளர் ஒரு ஷிப்ட் மட்டுமே பணியாற்ற வேண்டும் என்றாலும், முழு விருப்பத்தின் அடிப்படையில், தினமும் ஒன்றரை 'ஷிப்ட்' வேலை பார்க்கின்றனர். அவசர ஆர்டரின் போது, கூடுதல் நேரம் பணியாற்றி, உரிய சம்பளத்தை கூடுதலாக பெற்று பயன்பெறுகின்றனர்.  கூடுதல் நேரம் பணியாற்றுவதை, சட்ட ரீதியாக மாற்றுவதும் தொழிலாளர்களுக்கும், தொழில்துறையினருக்கும் நன்மை பயக்கும்,'' என்றார்.தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர்கள் சங்க (சைமா) தலைவர் ஈஸ்வரன் கூறுகையில்,''திருப்பூரில், கூடுதல் நேரம் சேர்த்து, தொழிலாளர்கள் நிறைவாக பணியாற்றி வருகின்றனர்; கை நிறைய சம்பளம் வாங்குகின்றனர். தினசரி பணி நேரத்தை உயர்த்தி நிர்ணயம் செய்வதில் பல்வேறு அம்சங்களை ஆராய வேண்டியிருக்கும். கூடுதல் விடுமுறை அளிக்க வேண்டிய நிலை ஏற்படும்.
தொழிற்சங்கங்கள், தொழில் அமைப்புகளுடன் விரிவாக கலந்துபேசிய பின்பே, இதுகுறித்து முடிவு செய்யப்பட வேண்டும்,'' என்றார்.

