/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தொழில் நிலவரம் அறிந்து புதிய வர்த்தக கொள்கை
/
தொழில் நிலவரம் அறிந்து புதிய வர்த்தக கொள்கை
ADDED : ஜன 26, 2024 01:38 AM

திருப்பூர்;'கள ஆய்வின் மூலமாக, தொழில் நிலவரத்தை அறிந்து, பிரச்னைகளுக்கு தீர்வு வழங்கும் வகையில், மத்திய, மாநில அரசுகள் புதிய வர்த்தக கொள்கையை வெளியிட வேண்டும்,' என, திருப்பூர் சாய ஆலை உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.
இதுகுறித்து திருப்பூர் சாய ஆலை உரிமையாளர்கள் சங்க தலைவர் காந்திராஜன், பொதுசெயலாளர் முருகசாமி, பொருளாளர் மாதேஸ்வரன் ஆகியோர் கூறியதாவது:
சாயத்தொழில், கடந்த மூன்று ஆண்டுகளாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இறக்குமதி செய்யும் இயந்திரங்களுக்கு மானியம் வழங்க வேண்டும். 'ஏ-டப்' திட்டத்தை, 2022 ஏப்., 1 முதல் பின்தேதியிட்டு மீண்டும் அமல் படுத்த வேண்டும்.
'ஜீரோ டிஸ்சார்ஜ்' தொழில்நுட்பத்தை செயல்படுத்தும் சாய ஆலைகளின் வட்டியில்லா கடனை, மானியமாக அறிவிக்க வேண்டும். பொருளாதார இழப்புகளை சரிக்கட்ட ஏதுவாக, கூடுதல் வங்கிக்கடன் வழங்கி உதவ வேண்டும்.
நாடு முழுவதும் உள்ள சாய ஆலைகளுக்கு, 'ஜீரோ டிஸ்சார்ஜ்' தொழில்நுட்பத்தை கட்டாயமாக்க வேண்டும். பின்னலாடை தொழில்நிலை மந்தமாக இருப்பதால், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பெற்ற கடனை, செயல்படாத வங்கி கணக்காக அறிவிப்பதில் இருந்து, ஆறு மாதம் விலக்களிக்க வேண்டும்.
தமிழக அரசு வழங்கிய கடனை, மானியமாக அறிவிக்க வேண்டும். சாயக்கழிவு சுத்திகரிப்பில், 40 சதவீதம் அளவுக்கு மின்சார கட்டண செலவு ஏற்படுகிறது. மின் கட்டண செலவை குறைக்க, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டத்தை, அதிகபட்ச மானிய உதவியுடன் அமல்படுத்த வேண்டும்.
உயர்த்திய மின் கட்டணங்களை குறைக்க வேண்டும். சாய ஆலைகளில் தேங்கும், அடர் கலவை உப்பை, எளிய முறையில் வெளியேற்ற வழிகாட்ட வேண்டும். சாய ஆலை, சுத்திகரிப்பு நிலைய பணியாளருக்கு, குடியிருப்பு வசதி செய்து கொடுக்க வேண்டும்.
களநிலவரம் அறிய வேண்டும்
மத்திய, மாநில அரசுகள், வெளிமாநிலம் மற்றும் பிற மாவட்டங்களில் முறையான அனுமதி பெறாமல் இயங்கும் சாயப்பட்டறைகளை தடை செய்ய வேண்டும். மத்திய, மாநில அரசு பிரதிநிதிகள் அடங்கிய குழு, ஒட்டுமொத்த பனியன் தொழில் நிலவரத்தை கள ஆய்வின் மூலமாக அறிந்து, தற்போதைய பிரச்னைகளுக்கு தீர்வு வழங்கும் வகையில், புதிய வர்த்தக கொள்கையை வெளியிட வேண்டும்
இவ்வாறு, அவர்கள் கூறினர்.

