/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கொங்கல் நகரம் அகழாய்வு 2ம் கட்ட பணி துவக்கம்
/
கொங்கல் நகரம் அகழாய்வு 2ம் கட்ட பணி துவக்கம்
ADDED : பிப் 14, 2025 01:37 AM

உடுமலை:மழையால் நிறுத்தப்பட்டிருந்த உடுமலை, கொங்கல் நகரம் அகழாய்வு திட்ட பணி மீண்டும் துவங்கியது.
திருப்பூர் மாவட்டம், உடுமலை கொங்கல் நகரம் பகுதியில், பெருங்கற்காலத்தைச் சேர்ந்த பல்வேறு பொருட்கள் மேற்பரப்பு ஆய்வில் கண்டறியப்பட்டன. இதையடுத்து, தமிழக அரசு தொல்லியல் துறை சார்பில், அப்பகுதியில் அகழாய்வு செய்ய அனுமதி வழங்கியது.
தமிழகம் முழுதும் கொங்கல் நகரம் உட்பட எட்டு இடங்களில் அகழாய்வு பணிகளை மேற்கொள்ள, அரசு 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, ஜூன் 2024ல் பணிகளை துவங்கியது. முதற்கட்டமாக, கொங்கல் நகரம் அருகிலுள்ள சோ.அம்மாபட்டி பகுதியில், பழங்காலத்தைச் சேர்ந்த வாழ்விட பகுதி தேர்வு செய்யப்பட்டு, அகழாய்வு செய்ததில், தமிழ் 'பிராமி' எழுத்துகள் கொண்ட பானை ஓடுகள், காதணி மற்றும் இதர அணிகலன்கள் கண்டறியப்பட்டன.
நவம்பரில் வடகிழக்கு பருவமழை துவங்கியதும், தோண்டப்பட்ட குழிகளில் தண்ணீர் தேங்கியது உள்ளிட்ட காரணங்களால் பணிகள் நிறுத்தப்பட்டன. தற்போது இரண்டாம் கட்ட பணிகளை தொல்லியல் துறையினர் துவக்கியுள்ளனர்.
இப்பகுதியில் கிடைக்கும் தொல்பொருட்களை கொண்டு உடுமலையில் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என, உடுமலை வரலாற்று ஆய்வு நடுவம் உள்ளிட்ட அமைப்பினர் அரசை வலியுறுத்தியுள்ளனர்.

