/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கிருஷ்ண ஜெயந்தி; பள்ளிகளில் கோலாகலம்
/
கிருஷ்ண ஜெயந்தி; பள்ளிகளில் கோலாகலம்
ADDED : ஆக 14, 2025 09:20 PM

- நிருபர் குழு -
கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, பள்ளிகளில் மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தி, கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
உடுமலை, பள்ளபாளையம் ஆதர்ஷ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. விழாவில் மழலையர் கண்ணணாகவும், ராதையாகவும், வேடமிட்டு பாட்டு பாடினர். மாணவியர், நடனமாடி மகிழ்ந்தனர். கிருஷ்ண ஜெயந்தி பூஜை செய்யப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகத்தினர் விழாவில் பங்கேற்றனர்.
* குறிச்சிக்கோட்டை ஆர்.வி.ஜி. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவில், மழலையர் தங்களின் பெற்றோருடன் பங்கேற்றனர். குழந்தைகளுக்கு கண்ணன் ராதையாக வேடமிட்டு, சிறப்பு அலங்காரம் செய்து பூஜை நடந்தது.
குழந்தைகளின் நடனம், இசை நிகழ்ச்சிகள் நடந்தன. மாணவர்களுக்கு முறுக்கு, சீடை பிரசாதமாக வழங்கப்பட்டன. பள்ளி தாளாளர் ஜூலியா, பள்ளி முதல்வர் மஞ்சுளாதேவி தலைமை வகித்தனர்.
* உடுமலை ஆர்.கே.ஆர்., கிரிக்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மழலையர் பிரிவில் நடந்த விழாவை, பள்ளி முதல்வர் மாலா துவக்கி வைத்தார். குழந்தைகள் கிருஷ்ணராகவும், ராதையாகவும் வேடமிட்டு ஆடிபாடி மகிழ்ந்தனர். விழாவுக்கு ஏற்பாடு செய்த ஆசிரியர்கள், மாண வர்களை ஆர்.கே.ஆர்., கல்வி குழு தலைவர் ராமசாமி, செயலாளர் கார்த்திக்குமார் பாராட்டு தெரிவித்தனர்.
* உடுமலை 'காட்' அமைப்பின் சார்பில் நாமத்வார் பிரார்த்தனை மையத்தில் நடந்த விழாவில், பக்தர்கள் பங்கேற்று பஜனை செய்தனர். குழந்தைகள் பங்கேற்று பக்தி பாடல்களை பாடினர்.
பொள்ளாச்சி பொள்ளாச்சி கேசவ் வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. பள்ளி நிர்வாகி மாரிமுத்து, பகவான் கிருஷ்ணரின் சிறப்புகள் குறித்தும், செயலாளர் ரவிச்சந்திரன், கிருஷ்ணரின் வாழ்க்கை மற்றும் போதனைகள் குறித்து விளக்கி பேசினர்.
மாணவர்கள், கிருஷ்ணர், ராதை வேடங்கள் அணிந்து கலாசார நிகழ்ச்சிகளில் ஈடுபட்டனர். பாரம்பரிய உரியடி போட்டி நடந்தது. பள்ளி முதல்வர் பிரகாஷ் நன்றி கூறினார்.
* ஆர்.கோபாலபுரம் எம்.எம்.எஸ். பள்ளியில், கிருஷ்ணஜெயந்தி விழாவையொட்டி மழலையர் வகுப்பு மாணவர்கள், கிருஷ்ணர், ராதை வேடமிட்டு அனைவரையும் மகிழ செய்தனர். நடனம், உரியடி போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பள்ளி நிர்வாகத்தினர் பங்கேற்றனர்.