/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கனிவாக பதில் சொன்ன ரயில்வேக்கு சபாஷ்
/
கனிவாக பதில் சொன்ன ரயில்வேக்கு சபாஷ்
ADDED : ஆக 08, 2025 11:40 PM

'ம னுக்களாக எழுதி குவித்தாலும் நடவடிக்கையோ பூஜ்ஜியம்தான்' என்று பலரிடமும் சலிப்பு தோன்றும். அதேசமயம், மனுவுக்கு மதிப்பளித்து கனிவான விளக்கத்தை அளித்தால், அதை மனம் ஏற்றுக்கொள்ளும்தானே!
பத்து ரூபாய் இயக்க திருப்பூர் மாவட்ட துணைச்செயலாளர் செல்லம், மத்திய ரயில்வே துறை அமைச்சகத்துக்கு மனு அனுப்பினார். அதற்கு கனிவுடன் அளித்த விளக்கத்தால் அசந்தார்.
அவர் அளித்த மனு: திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து, ரயில் மார்க்கமாக இருசக்கர வாகனத்தை பார்சல் செய்து அனுப்ப சென்ற போது, பார்சல் நடைமுறை குறித்த அறிவிப்பு அனைத்தும் ஆங்கிலத்தில் இருந்தது. இதைப் புரிந்து கொள்வது கடினமாக இருந்ததால், விதிமுறைகளை தமிழிலிலும் மொழி பெயர்த்து, அச்சிட வேண்டும்.
தெற்கு ரயில்வே கோட்ட தலைமையகத்தின் பதில்:
திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனில், அறிவிப்பு பலகையில் தமிழ் மொழி வாயிலாகவும் விதிமுறைகளை அச்சிட வேண்டும் என்ற பரிந்துரையை ஏற்றுக் கொள்கிறோம். இப்பிரச்னை உடனடியாக எங்கள் கவனத்தை பெற்றுள்ளது. உரிய அதிகாரிகளின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
அதன் விளைவாக, அறிவிப்பு பலகையில், தற்போது பிராந்திய மொழி அச்சிடப்பட்டுள்ளது. உங்களின் மதிப்பு மிக்க கோரிக்கையை ஏற்று, பொறுப்பான குடிமகனாக இருந்து, இதனை எங்கள் கவனத்துக்கு கொண்டு வந்ததற்கு நன்றி.
ரயில்வே துறை சார்ந்த குறையை தீர்க்க, 24 மணி நேரமும், '139' என்ற உதவி எண் செயல்படுகிறது. அதே போன்று 'ரயில் மதாத்' என்ற செயலி வாயிலாகவும் குறைகள், யோசனைகளை தெரியப்படுத்தலாம்.
ரயில்வே அளித்த பதில் குறித்து செல்லம் கூறியதாவது:
அறிவிப்பு பலகையில் தமிழ் மொழியிலும் நடைமுறை இடம் பெற வேண்டும் என்ற என் கோரிக்கை ஏற்கப்பட்டதில் மகிழ்ச்சியடைகிறேன். ரயில்வே நிர்வாகத்தின் கனிவான விளக்கம், பாராட்டுக்குரியது. இருப்பினும், இனி, தமிழ் மொழியில் விதிமுறைகள் இடம் பெறுவதற்கான ஏற்பாடுகளை ரயில்வே நிலைய அதிகாரிகள் மேற்கொண்டதாக தெரியவில்லை.
பார்சல் அனுப்பும் சேவை சார்ந்த படிவங்களிலும், தமிழ் மொழியில் அச்சிட வேண்டும் என்ற கோரிக்கையை அனுப்ப உள்ளேன்.