/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கொடி காக்கத் தன்னுயிரைக் கொடுத்தார் குமரன்! என்றும் வரலாற்றில் நிலைத்தார்
/
கொடி காக்கத் தன்னுயிரைக் கொடுத்தார் குமரன்! என்றும் வரலாற்றில் நிலைத்தார்
கொடி காக்கத் தன்னுயிரைக் கொடுத்தார் குமரன்! என்றும் வரலாற்றில் நிலைத்தார்
கொடி காக்கத் தன்னுயிரைக் கொடுத்தார் குமரன்! என்றும் வரலாற்றில் நிலைத்தார்
ADDED : ஆக 14, 2025 09:35 PM

தேசம் மீதுள்ள பாசத்தாலும், தேச விடுதலை மீதுள்ள வேட்கையாலும், தனது, 28 வயதிலேயே விடுதலை போராட்டத்தில் பங்கேற்று, இன்னுயிரை துறந்தவர் தான் திருப்பூர் குமரன். திருப்பூரின் வரலாற்று பக்கங்களில் அழிக்க இயலா அடையாளம் குமரன்.
ஈரோடு மாவட்டம், சென்னிமலையில் செ.மேலப்பாளையம் என்ற சிற்றுார் தான், குமரன் பிறந்த இடம். நெசவு தொழிலாளிகளான நாச்சிமுத்து - கருப்பாயி தம்பதியரின் மகன். நெசவுத் தொழிலில் போதிய வருமானம் இல்லாததால் திருப்பூருக்கு இடம் பெயர்ந்தது, அவரது குடும்பம். 1923ல், ராமாயி என்பவரை மணமுடித்தார் குமரன்.
தேச விடுதலையில் வேட்கை கொண்ட அவர், விடுதலை தொடர்பான போராட்டங்கள், கூட்டங்கள் என அனைத்திலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். சுதந்திர வேட்கையில் பற்றியெறிந்த அவரது உணர்வு, பிரிட்டிஷாரின் கவனத்தை ஈர்க்க, பிரிட்டிஷ் போலீசாரால் கண்காணிக்கப்படும் நபர்களில் ஒருவராக மாறினார்.
கடந்த, 1932 ஜன., 10ம் தேதி திருப்பூரில் பி.எஸ்.சுந்தரம் தலைமையில் நடந்த சட்ட மறுப்பு இயக்க போரட்டத்தில், திருப்பூர் குமரன் உட்பட, 10 பேர் பங்கேற்றனர். கையில் தேசிய கொடி ஏந்தி, 'வந்தே மாதரம்' கோஷம் முழங்க வீறுநடை போட்ட குமரனை, போலீசார் 'தரதர' வென இழுத்து பூட்ஸ் காலில் மிதித்து, அடிக்க துவங்கினர்; அவர்களது காட்டுமிராண்டித்தனமான தாக்குதலில், நிலைகுலைந்து சரிந்தார் குமரன். இருப்பினும், அவரது கையில் வலுவாக பிடித்திருந்த நம் நாட்டின் கொடி மட்டும், தலை கவிழாமல் விண்ணை நோக்கி கம்பீரமாக பறந்துக் கொண்டிருந்தது. உயிர் ஊசலாடிக் கொண்டிருந்த நிலையில் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட குமரனின் உயிர், அங்கு பிரிந்தது என்பது வரலாறு.