/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'குட்டீஸ்'களின் குதுாகல உணவுத்திருவிழா
/
'குட்டீஸ்'களின் குதுாகல உணவுத்திருவிழா
ADDED : நவ 08, 2025 11:52 PM

'வா ங்க... வாங்க... வர்ற யாரும் சாப்பிடமா போக கூடாது; எல்லோருக்கும் ஒரு பிளேட் கொடுங்க. ஒவ்வொரு டேபிளா போய் பாருங்க. உங்களுக்கு பிடித்ததை பாத்துட்டு, சாப்பிட்டு வந்து, கருத்து சொல்லுங்க' என அனைவருக்கும் வரவேற்பு கொடுத்துக் கொண்டிருந்தார், ஆசிரியை ஒருவர்.
திருவிழாவுக்கு வருவது போல், பெற்றோரும் தங்கள் குழந்தைகளின் படைப்புகளை அறிந்து கொள்ள, ஆவலுடன் புறப்பட்டு, மாஸ்கோ நகர், மாநகராட்சி பள்ளியில் நடந்த உணவுத்திருவிழாவுக்கு வந்திருந்தனர். மழலை குரலில் ஒன்றாம் வகுப்பு குழந்தைகள் தங்கள் தயாரித்து கொண்டு வந்திருந்த உணவு பதார்த்தங்கள், நன்மைகளை எடுத்துக் கூறினர். பாரம்பரிய உணவு, சிறுதானிய உணவு, அரிசி உணவு, உணவே மருந்து, உண்ண கூடாத உணவு ஆகிய தலைப்புகளில் அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தது.
திருமண வீட்டு வரவேற்பு நிகழ்ச்சி போல் தனியாக 'பபே' சிஸ்டம் வேறு. உணவு வகைகளின் மணம் பள்ளி வளாகம் முழுதும் கமகமத்தது. மாநகராட்சி துவக்கப்பள்ளியின் இந்த உணவுத்திருவிழா பெற்றோரை வியக்க செய்தது.
உணவு திருவிழா நிறைவில், ஒவ்வொரு அரங்கிலும், ஒவ்வொரு வகுப்பில், சிறப்பான உணவு தயாரித்த குழந்தைகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. முதல் வகுப்பு மோனிஷா (சீரக சம்பா வெஜ் பிரியாணி, நவதானிய அடை), இரண்டாம் வகுப்பு வர்ஷா (பீட்சா பர்கர் சாண்ட்விச் பாஸ்தா நுாடுல்ஸ், குளிர்பானம்), மூன்றாம் வகுப்பு மாணவி கிருத்திகா ஸ்ரீ (குதிரைவாலி பொங்கல், நிலக்கடலை துவையல்), நான்காம் வகுப்பு அனுஸ்ரீ (துத்தி இலை சட்னி, காய்கறி அடை தோசை), ஐந்தாம் வகுப்பு மாணவி ஸ்ரீ அவந்திகா (கறிவேப்பிலை குழம்பு, வாழைப்பூ கோலா உருண்டை, சர்க்கரைவல்லி கிழக்கு கட்லெட்)
பள்ளி தலைமை ஆசிரியர் செந்தில்வடிவு கூறுகையில், 'இயற்கை, பாரம்பரிய உணவு குறித்து குழந்தைகள், பெற்றோர் முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும். வேண்டாத, விரும்பதகாத உணவுகளை உண்ணும் போது தான் உடலுக்கு கேடு நேரிடுகிறது. துவக்கப்பள்ளி குழந்தைகளுக்கு இத்தகைய உணவுகளை கொடுத்தால், அவர்கள் ஆரோக்கியமாக இருப்பார்கள்; நலமுடன் பள்ளிக்கு வருவர் என்பதற்காக உணவுதிருவிழாவை நடத்தினோம்,' என்றார் உற்சாகம் பொங்க.
கேரளா புட்டு, கடலை கறி, கர்நாடகா அக்கி ரொட்டி, திருச்செந்துார் திருப்பாக்கம், கொங்கு நாட்டு அரிசி பருப்பு சாதம், மதுரை பட்டர்பன், செட்டிநாடு குழி பணியாரம், மதுரை ரவா லட்டு, சிவப்பரிசிபுட்டு, கருப்புகவுனி அரிசிபுட்டு, முடக்கத்தான் தோசை, பிரண்டை துவையல், கற்பூரவள்ளி பஜ்ஜி, கருப்பு கவுனி இடியாப்பம் என நுாற்றுக்கு மேற்பட்ட விதவிதமாக உணவுகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.

