/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நில எல்லை அளவீடு இனி சிரமம் இல்லை
/
நில எல்லை அளவீடு இனி சிரமம் இல்லை
ADDED : மே 29, 2025 12:42 AM
திருப்பூர், ; திருப்பூர் மாவட்டத்திலுள்ள அனைத்து இ-சேவை மையங்களிலும் நில எல்லை அளவீடு செய்வதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வசதி, கொண்டுவரப்பட்டுள்ளது.
நிலம், வீட்டுமனை உரிமையாளர்கள் தங்கள் நிலங்களை அளவீடு செய்வதற்காக, கருவூலத்தில் பணம் செலுத்தி, தாலுகா அலுவலகத்துக்கு நேரில் சென்று விண்ணப்பிக்க வேண்டியிருந்தது. பொதுமக்கள் வசதிக்காக, இந்த நடைமுறை ஆன்லைன் மயமாக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் நிலங்களை அளவீடு செய்வதற்கு, இருப்பிடத்தில் இருந்தவாறே, https://tamilnilam.tn.gov.in என்ற தளத்தில், நில அளவைக்கு விண்ணப்பிக்கலாம்.
திருப்பூர் மாவட்டத்தில், மொத்தம் 900 இ-சேவை மையங்கள் செயல்பாட்டில் உள்ளன. இம்மையங்களில் ஏற்கனவே, பட்டா மாறுதல், உட்பிரிவுக்கு விண்ணப்பிக்கும் வசதி நடைமுறையில் உள்ளது. கடந்த 22ம் தேதி முதல், 'எப்-லைன்' எனப்படும் நில எல்லை அளவீட்டுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வசதி இ-சேவை மையங்களில் கொண்டுவரப்பட்டுள்ளது.
பட்டா நகல், ஆதார் உள்ளிட்ட ஆவணங்களுடன், விண்ணப்ப கட்டணம் 60 ரூபாய் மற்றும் ஒரு எல்லைக்கோட்டிற்கு, 200 ரூபாய் வீதம், நான்கு எல்லை கொண்ட நிலத்தை அளவீடு செய்வதற்கு, 800 ரூபாய் கட்டணத்தை ஆன்லைலேயே செலுத்தி விண்ணப்பிக்கவேண்டும்.
நில அளவை செய்யப்படும் தேதி விவரங்கள், சம்பந்தப்பட்ட மனுதாரருக்கு மொபைல்போனில் மெசேஜ் ஆக அனுப்பிவைக்கப்படும். குறிப்பிட்ட நாளில் நில அளவை செய்யப்பட்டு, மனுதாரர் மற்றும் நில அளவையர் கையெழுத்திட்ட அறிக்கை மற்றும் வரைபடம் பதிவேற்றம் செய்யப்படும். மனுதாரர், https://eservices.tn.gov.in என்கிற இணையதளத்திலிருந்து அவற்றை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.